மீண்டும் சொதப்பிய சாம்சன்… ரிஷப், பாண்டியா அசத்தல் – பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்

India vs Bangladesh Warm Up Match: 9வது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு தொடக்க போட்டி நடைபெறுகிறது. இதில் தொடரை நடத்தும் அமெரிக்கா அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கும் முன் 15 பயிற்சி ஆட்டங்களும் திட்டமிடப்பட்டன. 

அதில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. நியூயார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், ஓப்பனராக இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் அரைசதம்

ரோஹித் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களை அடித்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பண்ட் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 32 பந்துகளில் தலா 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 53 ரன்களை அடித்தார். தூபே 14 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன், 2 பவுண்டரிகளுடன் 49 ரன்களை சேர்த்தார். 

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. மெஹதி ஹசன், ஷாரிஃபுல் இஸ்லாம், முகமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அதேபோல் 183 ரன்களை துரத்திய வங்கதேச அணி 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மொகமதுல்லா 40 ரன்களையும், ஷகிப் அல் ஹசன் 28 ரன்களையும் சேர்த்தார். இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் தூபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

யார் யாருக்கு வாய்ப்பு?

இன்றைய பயிற்சி ஆட்டத்தின் மூலம் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது எனலாம். மேலும், ஆரம்ப கட்ட பிளேயிங் லெவனில் தூபே களமிறக்கப்படலாம். இன்றைய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்தியா இந்த ஆடுகளத்தில் சுமார் 3 போட்டிகளை விளையாட உள்ளதால், பும்ரா, அர்ஷ்தீப் உடன் ஹர்திக் பாண்டியா மற்றும் தூபே களமிறக்கப்படலாம். 

All smiles in New York as #TeamIndia complete a 60-run win in the warmup clash against Banglades

Scorecard https://t.co/EmJRUPmJyn#T20WorldCup pic.twitter.com/kIAELmpYIh

— BCCI (@BCCI) June 1, 2024

மேலும் சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படலாம், இதனால் பேட்டிங் வரிசை நீட்டித்து காணப்படலாம். இன்றைய போட்டியின்படி பார்த்தால் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தூபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் (அல்லது) சாம்சன், ஜடேஜா, குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப் சிங் இதுதான் முதற்கட்ட பிளேயிங் லெவனாக இருக்கலாம். ஏனென்றால் இன்றைய போட்டியில் சஹால், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் விளையாடவே இல்லை. விராட் கோலி விளையாடாவிட்டாலும் அவருக்கான இடம் உறுதி. சிராஜ் கொஞ்ச காலம் பெவிலியனில் நிற்க வைப்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.