காத்மண்டு,
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலியல் புகார் எழுந்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவை விடுதலை செய்தது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சனேவின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சனே தெரிவித்திருந்தார்.
இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அமெரிக்க விசாவுக்கு சந்தீப் லமிச்சனே 2-வது முறையாக விண்ணப்பித்தார். ஆனால் அவரின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாகவும் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.