காசா: ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காசா இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும்நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இருப்பினும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து தான் வருகிறது. காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அதோடு, இஸ்ரேல் முன்மொழிந்துள்ள திட்டத்தின் படி, ஆறு வார காலத்திற்குள் படிப்படியாக மக்கள் அதிகமாக இடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது என்றும் பிணைக் கைதிகள் வெளியேற்றம் குறித்தும், ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தம் தொடர்பாக, காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை. ஹமாஸின் ராணுவத்தை அழிப்பது, அனைத்து பணையக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் காசா இனி இஸ்ரேலுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்தல் போன்றவற்றை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே உடனடி போர் நிறுத்தத்துக்கு கனடா அழைப்பு விடுப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். அதில், “உடனடி போர் நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிப்பது மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒரு வாய்ப்பாகும். மேலும் அமைதிக்கான பாதைக்கு திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.