விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி. 28 வயதான இவர், சென்ட்டரிங் வேலை செய்யும் தினக்கூலி ஊழியர். சத்தியப்பிரியா என்பவரை காதலித்து வந்த சாரதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். வி.அகரம் கிராமத்தில் வசித்து இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், குழந்தை வரம் வேண்டி தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற பல கோயில்களுக்கும் இருவரும் சென்று வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த மாதம் சத்தியப்பிரியா கர்ப்பமாகியிருக்கிறார். அதில் இருவரும் மகிழ்ச்சியில் இருந்திருக்கின்றனர். கடந்த 22-ம் தேதி கெங்கராம்பாளையம் பகுதியிலிருக்கும் ஒரு விவசாய நிலத்தில், மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்டரிங் பலகைகளை அடித்துக் கொண்டிருந்தார் சாரதி.
அப்போது அங்கிருந்த இரும்புக் கம்பியைத் தூக்கியபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் சாரதி. அதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மின் விபத்தில் காயங்கள் அதிகமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து அவரது உடல் 30-ம் தேதி சொந்த ஊரான வி.அகரம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிறைமாத கர்ப்பிணியாக கணவனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட சத்தியப்பிரியாவுக்கு, அப்போது பிரசவ வலி ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, அல்லது அதைப் பார்ப்பதற்கு சாரதி இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதா என்று தவித்து வருகிறார்கள் உறவினர்கள்.