Doctor Vikatan: COPD பிரச்சினை உள்ளவர்கள் எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்… விளக்கமாக கூறவும்.
-Nagarajan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
‘க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ்’ (Chronic Obstructive Pulmonary Disease) என்பதன் சுருக்கமே சிஓபிடி (COPD). அதாவது நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு என்று புரிந்துகொள்ளலாம். புகைப்பழக்கம் உள்ளவர்களே இந்தப் பிரச்னைக்கு முதலில் இலக்காகிறார்கள். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், நார்மலாக இருக்கும்போது புகைப்பழக்கம் காரணமாக அவர்களுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும்.
புகைப்பழக்கம் இல்லாதநிலையில், தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், தூசு, மாசுள்ள சூழலில் வேலை செய்வோர், சிறுவயதிலிருந்தே அடிக்கடி தொற்று பாதிப்புகளுக்கு உள்ளாவோர், விறகடுப்பில் சமைப்பவர்கள் போன்றோருக்கும் நுரையீரலை பாதிக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சளி, இருமல் அதிகமிருக்கும். மூச்சுத்திணறலும் வீஸிங்கும் இருக்கும். பொதுவாக இது 40 ப்ளஸ் வயதுக்குப் பிறகுதான் பாதிக்கும். அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
சிஓபிடி (COPD) பாதிக்கப்பட்டோருக்கு காற்றுக்குழாயை விரிவடையச் செய்கிற பிராங்கோடைலேட்டர்ஸ் ( Bronchodilators ) வகை மருந்துகளே பிரதானமாகப் பரிந்துரைக்கப்படும். சிஓபிடி பாதிப்பு என்பது அலர்ஜியால் ஏற்படுவதல்ல… புகையில் உள்ள நச்சுகளால் தூண்டப்படுகிற பாதிப்பு இது. எனவே, இந்தப் பிரச்னைக்குள்ளானோருக்கு பிரத்யேக உணவுகள் என்று எதுவும் அறிவுறுத்தப்படுவதில்லை.
சிஓபிடி (COPD) பாதிப்பு தீவிரமாகும் நிலையில் பாதிப்புக்குள்ளானோரால் பத்து அடிகள்கூட நடக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மிகக் குறைந்த அளவு உணவு எடுத்துக்கொண்டாலும் வயிறு நிறைந்து, அது நெஞ்சுப் பகுதியை அழுத்துவதால், மூச்சு விடுவதில் இன்னும் சிரமம் அதிகரிக்கும். அதற்கு பயந்துகொண்டே அவர்கள் சாப்பிடுவதையே தவிர்ப்பார்கள். அதன் காரணமாக உடல் எடையும் குறையும். எளிதில் தொற்றுக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதற்கு இடம்கொடுக்கக்கூடாது.
நீரிழிவு பாதித்தவர்களுக்கு அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் அப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவோம். அதுவே சிஓபிடி (COPD) பாதித்தோருக்கு கொஞ்சமாகச் சாப்பிட்டாலே கலோரி தேவை பூர்த்தியாக வேண்டும், அதே நேரம் வயிறு நிறைந்து, நெஞ்சுப் பகுதியை அழுத்தாததாக இருக்க வேண்டும், அதற்கேற்ப சாப்பிடுங்கள் என அறிவுறுத்துவோம். உதாரணத்துக்கு, வழக்கமாக 3 இட்லி சாப்பிடுவோர் என்றால், அதற்கு பதில் ஒன்றரை தோசை எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஒன்றரை இட்லி சாப்பிட்டு, ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒன்றரை இட்லி சாப்பிடலாம்.
சிஓபிடி (COPD) தீவிரமாகி, வீஸிங் அதிகமான நிலையில் கொஞ்சம்கூட சாப்பிடுவதில்லை என்ற புகாருடன் எங்களைச் சந்திக்க வருவோருக்கு இப்படித்தான் டயட் அட்வைஸ் கொடுப்போம். கூடவே, அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்படியான உணவுகள், தடுப்பூசிகள் போன்றவற்றையும் பரிந்துரைப்போம். மற்றபடி நீங்கள் கேட்டுள்ளபடி இந்த உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை. குளிர்ந்த உணவுகள் பாதிப்பைத் தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றைத் தவிர்க்கச் சொல்வோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.