ஜீவகாருண்யம் பேசும் இளைஞன், அவனைக் கைப்பாவையாக மாற்றிக் கொலை செய்ய வைக்கும் முகமூடி மனிதன் என இவர்கள் தொடர்புடைய மர்மக் கதையே இந்த ‘ஹிட் லிஸ்ட்’.
விஜய் (விஜய் கனிஷ்கா) எலியைக் கூட கொல்லக்கூடாது என்று ஜீவகாருண்யம் பேசும் வள்ளலார் பக்தர். ஐடி ஊழியரான அவர் தனது தாய் (சித்தாரா) மற்றும் சகோதரி கீர்த்தி (அபி நட்சத்திரா) ஆகியோருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய்க்கு ஒரு நாள் முகமூடி அணிந்த மர்ம மனிதரிடமிருந்து போன் அழைப்பு வருகிறது. அவர் விஜய்யின் தாய் மற்றும் சகோதரியைக் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்கத் தான் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுகிறார்.
முதலில் சேவலைக் கொல்லச் சொல்வதில் ஆரம்பிக்கும் இந்தக் கட்டளை அடுத்தடுத்து கொடூரமான ரவுடி காளியைக் (ராமச்சந்திர ராஜூ என்கிற கருடா ராம்) கொல்லச் சொல்வது வரை நீள்கிறது. விஜய் காளியைக் கொல்வதில் வெற்றி பெறுவாரா, அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவாரா, முகமூடி அணிந்த கடத்தல்காரர் யார், பின்னணி என்ன என்பதாக லிஸ்ட் போடும் அளவுக்கு நிளூம் கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்கிறது படம்.
சாத்வீக இளைஞராக எலியின் மீது கருணை, கட்டுப்பாடான ஒழுக்கம் எனச் சற்றே பாஸ் மார்க் வாங்கும் அறிமுகம் கொடுத்திருக்கிறார் இயக்குநரின் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. அதிரடி சண்டைக் காட்சிகளில் நிறைய மெனக்கெடல் எடுத்துள்ள அவரிடம், உணர்வுபூர்வமான காட்சிகளைத் தாங்க இன்னும் நிறைய நிறையப் பயிற்சி தேவை. தாயாக நடித்துள்ள சித்தாராவுக்கு ‘ரீ என்ட்ரி’. ஆனால் அவரது கதாபாத்திரம் பெயர் சொல்லும் அளவில் வலுவில்லாமல் இருப்பது வருத்தமே! கொடூர வில்லன் காளியாக ராமச்சந்திர ராஜூ முறைப்பது, கத்துவது என டெம்ப்ளேட் ரியாக்ஷன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்.
ஏ.சி.பி யாழ் வேந்தனாக சரத்குமாரை நாயகன் நடிப்பதை வேடிக்கை பார்க்கவும், விசாரணை என்ற பெயரில் கம்ப்யூட்டர் முன்னாள் உட்கார்ந்து மானிட்டர் பார்க்கவும் வைத்து அவரது அனுபவத்தை வீணடித்திருக்கிறார்கள். வழக்கம்போல இம்பேக்ட் பிளேயர் விதிபோல திடீரென என்ட்ரி கொடுத்து சில காட்சிகளுக்கு வந்து போகிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனால் சொற்ப ரன்களில் வெளியேறும் வீரர் போல அவரது நடிப்பு எந்தவித தாக்கத்தையும் விட்டுச்செல்லாமல் முடிகிறது.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். ஒளிப்பதிவாளர் கே.ராமச்சந்திரன் ஒரு குறுகிய இடத்துக்குள் நகரும் கதைக்கு கேமரா கோணங்களிலும், ஒளியுணர்வின் தரத்திலும் இன்னும் சிறப்பான பங்களிப்பைத் தர முற்பட்டிருக்கலாம். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாமின் காட்சி கோர்வையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்கான விறுவிறுப்பு மிஸ்ஸிங். அதிலும் முக்கியமான இறுதி காட்சி, சாதாரண காட்சியாக அடுக்கப்பட்டிருக்கும் எடிட்டிங் பாணி படத்தின் பெரிய பலவீனம். சி.சி.டி.வி கண்காணிப்பு அறை, முகமூடி மனிதனின் அறை ஆகிய இடங்களில் அருண் ஷங்கர் துரையின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.
ஒன்லைனாக எழுதினால் சுவாரஸ்யம் தரும் கதைக்கருவை எடுத்துக் கொண்டு அதைப் படு சுமாரான த்ரில்லராக மாற்றியிருக்கிறார்கள் இயக்குநர்கள் சூரியக்கதிர் மற்றும் கே.கார்த்திகேயன். `நீளும்’ கதாபாத்திர அறிமுகம், சுவாரஸ்யமில்லாத காட்சிகள், இரட்டை அர்த்த நகைச்சுவை என ஆரம்பமே நம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆனால் இடைவேளை சண்டைக் காட்சியும், முகமூடி மனிதனின் நோக்கம் என்ன என்று சுவாரஸ்யமாகப் போடப்படும் முடிச்சுகளும் அடுத்து என்ன என்பதாக ஆர்வத்தைக் கொண்டு வருகின்றன.
இரண்டாம் பாதி மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து ஆரம்பிக்கும் தருணத்திலிருந்து திரைக்கதை மீண்டும் சரிவை நோக்கி நகரத் தொடர்கிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறை காட்சிகளில் துணை நடிகர்களின் நடிப்பு, அவற்றைப் படம்பிடித்த விதம் என அனைத்திலும் செயற்கைத்தனமே எட்டிப் பார்க்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் சரத்குமார், பாதுகாப்புத்துறை அமைச்சர் வரை போகும் வழக்கினை, சாதாரண ‘பெட்டி’ கேஸ் போல விசாரிக்கும் பாணி ‘சீரியஸ்’ காமெடி டிராமா! அதிலும் வடசென்னை, மீனவர் பகுதி குறித்த பொதுத் தன்மையான சித்திரிப்பு மாறிவரும் சூழலில் மீண்டும் அவர்களை முரடர்களாகவும், கொடூர கொலைகாரர்களாகவும் காட்டுவது கண்டிக்கத்தக்கது. க்ளைமாக்ஸ் காட்சியில் வெளிப்படும் ட்விஸ்ட்டுக்குப் பிறகு முன்னர் வந்த காட்சிகளை யோசித்துப் பார்த்தால் நிறைய லாஜிக் ஓட்டைகள் சல்லடையாகப் பல்லிளிக்கின்றன.
கடைசி ட்விஸ்ட்டை மட்டுமே நம்பி பின்னப்பட்ட இந்த `ஹிட் லிஸ்ட்’, தட்டையான விசாரணை முறை, லாஜிக் இல்லா திரைக்கதையால் ஆவரேஜ் லிஸ்ட்டில் கூட இடம்பெறாமல் ஏமாற்றமளிக்கிறது.