இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்து `பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார்.
கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தப் படம் உண்மை மற்றும் புனைவு கதையாக உருவாகி வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
சமீப காலமாகப் பல பெரிய படங்களைக் கூட ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்காமல் ஓ.டி.டி-யில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“ஒவ்வொரு வீட்டிலும் சாமி படங்கள் பூஜை அறையில் உள்ளன. அதற்காக மக்கள் கோயிலுக்குச் செல்வது இல்லையா? அங்கேதானே அதிக கூட்டம் இருக்கிறது. அதுபோலத்தான் ஓ.டி.டி ஒரு லைப்ரரி போலப் பிடித்த படத்தைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்க்கலாம். ஆனால், புதிய படங்கள் வரும்போது மக்கள் கூட்டமாக தியேட்டருக்கு வந்து பார்ப்பதைத்தான் விரும்புகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
‘தென்மாவட்டங்களில் சாதியக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான விழிப்புணர்வு படங்களில் இருக்குமா?’ என்ற கேள்விக்கு, “அடிப்படையாகவே இங்கு நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. உடனே மாற்ற முடியாது. காலங்காலமாகப் புரையோடிப்போய் மனதில் தங்கியிருக்கின்ற ஒரு விஷயமாக இது இருக்கிறது. அதையும் ரொம்ப மெனக்கெட்டு மாற்றக்கூடிய நிலை இருக்கிறது. நாம் சாதாரணமாகச் சொல்கிறோம், ஒரு சட்டம் போட்டால், ஒரு திட்டம் போட்டால் மாற்றி விடலாம் என்று.
அதெல்லாம் முடியாது. உளவியலாக ரொம்ப ஸ்ட்ராங்காகவே ஜாதி இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி எல்லா தளங்களிலும் சேர்ந்து ஒரு முயற்சியை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அப்படிச் செய்தால்தான் அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்ச புரிதலுக்கு வருவார்கள் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.