திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, ஜூன் 1-ம் தேதி காலை 11 மணிக்குக் காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமாக வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் என்ன செய்யவேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி நடைபெற்றது.
காணொளி வாயிலாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “வாக்கு எண்ணிக்கை சமயத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒரு பயிற்சி கூட்டமாகவே இருந்தது. வாக்கு எண்ணிக்கை சமயத்தில் தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என்ன செய்யவேண்டும்…
தபால் வாக்குகள் தொடங்கி முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து என்.ஆர்.இளங்கோ விரிவாகப் பேசினார். அதுபோக, எந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும் எவ்வித பிரச்னையும் இல்லாது நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் எதுவென்றாலும், முகவர்கள் உடனடியாக மாவட்ட பிரதிநிதி அல்லது கழக சட்டத்துறையினரைத் தொடர்பு கொள்ளவேண்டும்” என்று பேசியதாகத் தெரிவித்தனர்.