அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மகள்; கலங்கி நின்ற நாடோடி குடும்பம் – உதவிய வேலூர் இளைஞர்!

திருச்சி, திருவெறும்பூர் பகுதியிலுள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் த்ரிஷா – வயது 21. நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இந்த பெண் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 மாதங்களாக கடுமையான மூச்சுத் திணறல், இருமல் ஏற்படுவதோடு, 5-ல் இருந்து 6 கிலோவுக்கு உடல் எடையும் குறைந்திருக்கிறது. இப்படியொரு நோயால் மகள் த்ரிஷா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக்கூட அவரது நாடோடி குடும்பத்தினரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நோயின் தீவிரம் அதிகமானதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 30-ம் தேதி பேருந்தில் ஏறிப் புறப்பட்டிருக்கின்றனர்.

நாடோடி குடும்பம்

கையில் காசு இல்லை, ஆனால், மகளை காப்பாற்றிவிட வேண்டும் என்கிற ஏதோவொரு நம்பிக்கையில் இவர்களின் பயணம் இருந்தது. வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கிய நாடோடி குடும்பத்தினருக்கு, `எங்குச் செல்வது?’ எனத் தெரியாததால் பேருந்து நிலைய வளாகத்திலேயே தங்கினர். அன்று இரவு உணவுக்குக்கூட வழியில்லாமல் பரிதாபமாக படுத்துக்கிடந்த நாடோடிகள் குறித்த தகவல் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் என்பவருக்குத் தெரியவந்தது.

அங்கு விரைந்துசென்ற தினேஷ் சரவணன் உணவு வாங்கிக்கொடுத்து தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். “எதற்காக வந்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, மறுநாள் காலை தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்கான உதவிகளையும் செய்துகொடுத்தார் தினேஷ் சரவணன். மருத்துவமனை நிர்வாகமும் இலவசமாக பரிசோதனை செய்து, அவர்களின் பொருளாதாரச் சூழலை அறிந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைச் செய்தது. நேற்று இரவு வரை, அதாவது தொடர்ந்து 3 நாள்களுக்கு நாடோடி குடும்பத்தினருக்கு உதவிய தினேஷ் சரவணன், அவர்களின் பரிதாப நிலையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடமும் கவனப்படுத்தினார்.

உதவி செய்த தினேஷ் சரவணன்

ஆட்சியர் உத்தரவின்பேரில், சமூக நலத்துறை அலுவலர்கள் நேற்று மாலை வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று நோய் வாய்ப்பட்ட இளம் பெண் மற்றும் அவரது நாடோடி குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் மருத்துவ தேவைகளையும் கேட்டு பதிவுகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தினர். அதோடு மட்டும் நிற்காமல், வேலூர் பத்திரிகையாளர்கள் மூலமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜனையும் தொடர்புகொண்டு நாடோடி பெண்ணுக்கு மருத்துவ உதவி கோரப்பட்டது. டீன் தேரணி ராஜனும் சென்னை அனுப்பி வைக்குமாறு சொல்ல… இரண்டாயிரம் ரூபாயை பேருந்து கட்டணத்துக்காக கொடுத்து நாடோடி குடும்பத்தைப் பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார் தினேஷ் சரவணன்.

நாடோடி மக்களும் தங்களுக்கு உதவிய சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் பத்திரிகையாளர்கள் குமரவேல் உள்ளிட்டோருக்கும் கண் கலங்கியபடி நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டனர். இன்று காலை சென்னை சென்றடைந்த நாடோடி குடும்பத்தினர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை சந்தித்தனர். இதையடுத்து, நாளை காலை 9 மணிக்கு இளம் பெண் த்ரிஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். த்ரிஷாவின் சிகிச்சை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம்பேசி உறுதிப்படுத்தியிருக்கிறார். வேலூர் ஆட்சியரின் விரைவான இந்த நடவடிக்கையும் நாடோடி குடும்பத்தினருக்கு ஆறுதல் தந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.