`நம் சூரியக் குடும்பத்தில், ஒன்பது கோள்கள் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன’ என்று 2006-ம் ஆண்டுக்கு முன்புவரை படித்தோம்.
அதன்பிறகு, ‘ஒன்பதாவது கோள் என்று நம்மால் அழைக்கப்பட்டு வந்த புளூட்டோ, ஒரு கோளே அல்ல. அது ஒரு குறுங்கோள்’ எனப் பன்னாட்டு விண்வெளி ஒன்றியம் (International Astronomical Union), பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் முடிவெடுத்தது. அதனால், சூரியனைச் சுற்றி வருவது எட்டு கோள்கள் மட்டுமே என்பதுதான் இப்போதைய நிலை.
சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் அனைத்து கோள்களையும் இழுத்துக் கொண்டும் வினாடிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகத்தில் பயணிக்கிறது.
இந்த வேகத்தில் சூரியன் பயணித்தாலும், நம் நட்சத்திரக் கூட்டமான பால்வெளித்திரளை ஒரு சுற்றுச் சுற்றிவர, சுமார் 22.6 கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்தக் கால இடைவெளியில் டைனோசர்கள் தோன்றி, பூமியை ஆட்டிப் படைத்து ஆக்கிரமித்து பின்னர் முற்றிலும் அழிந்தே விட்டன. இவை அழிந்து சுமார் 6.5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன! இதுபோல எத்தனை எத்தனையோ கால மாற்றங்களைக் கடந்தும் சூரியனின் பயணம் ஓயாத பயணமாகத் தொடர்கிறது.
சூரியனின் இந்தப் பயணத்தால், வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு வினாடியும் புதுப்புது இடங்களை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். ‘நான் அதே கோண வாய்க்கால் கரையில் இருக்கும் எங்கள் வீட்டில்தான் தினமும் வசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கிருந்து புதுப்புது இடங்களுக்குப் போனேன்’ என்று யோசிக்கிறீர்கள்தானே.
கண்காணாததொரு அற்புதப் பயணம்!
இது, கண்காணாததொரு பயணம். நேரடியாக அனுபவிக்க இயலாததொரு பயணமும்கூட. அதேசமயம், அவ்வப்போது மாறி மாறி நிகழும் வானியல் அற்புதங்கள் வாயிலாக இந்தப் பயணத்தை நாம் ஓரளவுக்கு அனுபவிக்க இயலும். இந்தப் பயணத்தில் நாம் கடந்து சென்ற இடத்தை, நம் வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை கண்டுகளிக்க வாய்ப்பே இல்லை.
அந்த அற்புத நிகழ்வுகளை… நட்சத்திர வெடிப்பு (Supernova), வால் நட்சத்திர வருகை, எரிகல் மழையாகக் கொட்டும் விண்கற்கள், துருவச் சுடரொளி (Aurora Borealis) மற்றும் பல கோள்களின் பெரிய அளவிலான ஒன்றிணைப்பு காட்சிகள் (great Conjunctions) எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சூரியனைச் சுற்றும் இந்த எட்டுக் கோள்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களுக்கு என ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அது என்னவென்றால், தொலைநோக்கி உதவி இல்லாமல் இவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால், எப்போதுமே பார்க்க முடியாது.
இதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. அனைத்து கோள்களும் நீள்வட்டப் பாதையிலேயே சுற்றுவதால் பூமிக்கும் பிற கோள்களுக்கும் இடையேயான தூரம் ஒரே அளவாக இருப்பதில்லை. உதாரணமாக, பூமிக்கு அருகில் புதன் வரும்போது, நமக்கும் புதனுக்கும் இடையேயான தூரம் 7.7 கோடி கிலோ மீட்டர். பூமியை விட்டு விலகி அதிகபட்சமாக புதன் 13.8 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கும் புதன் பயணிக்கும். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது புதனைப் பார்க்க முடியாது. காரணம் சூரியனின் அதீத ஒளிவெள்ளத்தில் புதனின் உருவம் மூழ்கடிக்கப்படும்.
விடிவெள்ளி நட்சத்திரமல்ல!
சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது புதன் நன்றாக நம் கண்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் நமக்கு அருகில் புதன் வந்தால், நம்மால் இன்னும் நன்றாகப் புதனைப் பார்க்கமுடியும். பொதுவாக, புதன் கிரகத்தை ஜூன் மாத இறுதியில் அந்திப் பொழுதில் நன்கு பார்க்கலாம்.
வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நான்கு கோள்களை ஆண்டு முழுவதும் பார்க்கலாம். ஆனால், இவையெல்லாம் ஒன்றாக வருவதில்லை. அதிகாலையில் ஒன்றும் அந்திப்பொழுது ஒன்றும் மற்றும் நள்ளிரவில் ஒன்றும் என வெவ்வேறு நேரங்களில்தான் தலைகளைக் காட்டும். பொதுவாக, வெள்ளியும் வியாழனும் அடிக்கடி இணைந்துதான் காட்சி தரும். இந்த நான்கையும் ஒரே நேரத்தில் பார்ப்பது அரிதானது. வெள்ளி ஒரு கோளாக இருந்தாலும், மக்கள் இதனை ‘விடி வெள்ளி’ (morning star) என ஒரு நட்சத்திரமாகவே அழைக்கின்றனர். ஏப்ரல் மாதத்தில், தெற்கு கீழ்வானத்தில் இந்த வெள்ளியைத் தெளிவாகக் காணலாம்.
வெறும் கண்ணாலேயே சனி தரிசனம்..!
பூமியிலிருந்து அதிக தொலைவில் சனி இருந்தாலும், வெறும் கண்ணால் பார்க்க முடிகிறது. சனி நமக்கு அருகே இருக்கும்போது, பூமிக்கும் அதற்கும் இடையே உள்ள தூரம் 120 கோடி கிலோ மீட்டர். ஆனால், அதிகபட்சமாக இது 167 கோடி கிலோ மீட்டர் தொலைவரை பூமியை விட்டு விலகியும் செல்லும். இருந்தாலும், ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். இதற்குக் காரணம், சனி நம் சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளாக இருப்பதாலும்; இதனைச் சுற்றி நிறைய நொறுங்கிய விண்கற்கள் பல பட்டைகளாக இருந்துகொண்டு சூரியக் கதிர்களைப் பிரதிபலிப்பதும்தான்.
சனியை தொலைநோக்கி உதவி எதுவும் இல்லாமல் பார்க்க முடிகிறது. ஆனால், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கோள்களை தொலைநோக்கி உதவி இல்லாமல் எளிதில் பார்க்க முடியாது.
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:
1. பூமியிலிருந்து யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பல நூறு கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
2. இவற்றைவிட நெடுந்தூரத்துக்கு சூரிய ஒளி பயணித்து, வலுவிழந்த நிலையில்தான் இந்தக் கோள்களின் மீது விழுகிறது. இதனால், இவை அதிகமாக ஒளிராது. எப்போதும் மங்கலாகவே காட்சி தரும்.
3. இவை, வியாழன் மற்றும் சனி கோள்கள் மாதிரி உருவத்தில் மிகப் பெரியவையும் அல்ல.
நாளைய அற்புத நிகழ்வு எப்போது?
சரி, அற்புத நிகழ்வுக்கு வருவோம். நாளை (ஜூன் -3) சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக அடிவானத்தில் வெள்ளி கிரகத்தைத் தவிர, வியாழன், புதன், செவ்வாய், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய ஆறு கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். இவற்றில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டையும் தொலைநோக்கி உதவியால்தான் தெளிவாகப் பார்க்க முடியும்.
“இந்த ஆறு கோள்களும் பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. என்றாலும், வானத்து அதிசய திருவிழாவாக ஒரே நேரத்தில் நாம் பார்வைக்கு விருந்தளிக்கின்றன. வானம் மேகமூட்டமின்றி தெளிவாகக் காணப்பட்டால் அதிகாலையில் இந்த அழகைக் கண்டுகளிக்கலாம். அடுத்தடுத்த நாள்களிலும் இவற்றில் சில கோள்களை அதே நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.
அதியசங்களுக்கு அளவே இல்லை!
இதுமாதிரியான அதிசயங்கள் வானில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமேதான் இருக்கின்றன. பிப்ரவரி- 5, 1962 அன்று புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேரத்தில் காட்சி தந்தன.
2000-ம் ஆண்டின் மே மாதத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒன்றாய்த் தோன்றின. ஆனால், சூரியனுக்கு மிக அருகில் தோன்றியதால், சூரியனின் அதீத ஒளி இந்த ஐந்து கோள்களையும் வெறும் கண்ணால் சரியாகப் பார்க்க முடியாமல் செய்தது.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் காட்சி தந்தன. இது ஓர் அபூர்வ நிகழ்வு. பூமியிலிருந்து பார்த்து ரசிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது!
397 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
வியாழன், தனது அண்டை கோளான சனியும் தத்தம் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றுகையில், ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன. எனினும், இரண்டு கோள்களும் மிகவும் நெருக்கமாகச் சந்திக்கும் அரிய நிகழ்வு, சுமார் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழ்கிறது. கடைசியாக 1623-ம் ஆண்டு இந்தப் பேரிணைவு நிகழ்ந்த நிலையில், 397 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 டிசம்பர் 21-ம் தேதி மாலை 6.30 மணியளவில் இது மீண்டும் நிகழ்ந்தது.
இம்மாதிரியாக பல கோள்கள் ஒரே நேரத்தில் காட்சி தரும் நிகழ்வு அடுத்து, 2040-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோன்றும். அப்போது புதன், வெள்ளி, செவ்வாய் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் ஒரே நேரத்தில் காட்சி தரும்.
சூரியனுடன் சேர்ந்து பூமி வாகனத்தில் அமர்ந்தபடி அதிவேகமாகப் பயணிக்கும் நமக்கு, இப்படிப்பட்ட விண்வெளி அற்புதக் கண்காட்சிகள் மாறிமாறி வந்தபடியேதான் இருக்கும். என்ன ஒரு தடவைப் பார்க்கும் அதே அதிசயத்தை, அடுத்த தடவைப் பார்ப்பதற்கு அதிசயத்துக்கேற்ப ஆயுளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு… பலநூறு கேள்விக் குறிகளே! எனவே, இப்போதைக்குக் கண்ணில் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.
இன்று (02/06/2024) ஞாயிற்றுக்கிழமை இரவு முழுக்க பார்ட்டி, டிவி, மொபைல், பயணம், கொண்டாட்டம் என்றே கழித்துவிடாமல் சீக்கிரமே உறங்கச் செல்லங்கள்… திங்கள் விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து அதியத்தைக் காணத் தயாராகிவிடுங்கள்!
‘இப்போ இல்லனா எப்பவுமே இல்லை’ சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை மறந்துவிடாதீர்கள்.