புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. கடைசிகட்ட தேர்தல் முடிந்த மறுநாள், திகார் சிறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தனது உடல் எடை மிகவும் குறைந்து விட்டதாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை வாதிடும் போது, “அவரது உடல் எடை தற்போது 1 கிலோ கூடியுள்ளது. இடைக்கால ஜாமீன் காலத்தில் உடல் பரிசோதனை செய்வதற்கு பதிலாக அவரது நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கூடாது.கீழ் நீதிமன்றத்தில் அவர் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கேஜ்ரிவால் மனு மீதான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், திகார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ஆஜராவது உறுதியாகியுள்ளது.