டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் 194 ரன்கள் என்ற இலக்கை 17.4 ஓவர்களிலேயே எடுத்து கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாதனை படைத்திருக்கிறது அமெரிக்க அணி. இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இவ்வளவு பெரிய ஸ்கோரை அசால்டாக எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருக்கும் ஏ குரூப்-ல் முதல் இடத்துக்கும் அமெரிக்கா முன்னேறியிருக்கிறது.
இம்முறை டி20 உலக கோப்பை தொடரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்கும் நோக்கில் ஐசிசி, டி20 உலக கோப்பையை அமெரிக்காவில் நடத்துகிறது. பெரும்பாலான போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் ஆறு மைதானங்களில் நடைபெற்றாலும், இந்தியா – பாகிஸ்தான் போன்ற மிக முக்கியமான போட்டிகள் அமெரிக்காவில் நடத்தும் வகையில் போட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.
டல்லாஸில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் இறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய நவ்னீத் தாலிவால் 44 பந்துகளில் 61 ரன்களும், நிக்லோஸ் கிரிட்ன் 31 பந்துகளில் 51 ரன்களும் விளாசினர். இறுதிக் கட்டத்தில் ஸ்ரேயாஸ் மோவா 16 பந்துகளில் 32 ரன்களும், தில்பரீத் சிங் 5 பந்துகளில் 11 ரன்களும் விளாசினர். சவாலான ஸ்கோர் என்பதால் இப்போட்டியில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்க அணி அதிரடி காட்டி 194 ரன்கள் என்ற இலக்கை ஈஸியாக எட்டியது. ஓப்பனிங் இறங்கிய டெய்லர் டக் அவுட்டான நிலையில், கேப்டன் மோனக் படேல் 16 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸை பூர்வீகமாக கொண்ட ஆரோன் ஜோன்ஸ் மற்றும் கோயஸ் அதிரடி காட்டினர். இருவரும் கனடா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். கோயஸ் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆரோன் ஜோன்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதில் சிக்சர்கள் மட்டும் பத்து. 17.4 ஓவர்களிலேயே 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அமெரிக்கா, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளையும் படைத்திருக்கிறது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஜூன் 6 ஆம் தேதி எதிர்கொள்கிறது அமெரிக்கா.