Nitish Reddy Explanation On Dhoni Controversy: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் மூலம் திறமையான பல கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள் எனலாம். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கூட ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஐபிஎல் மூலம் தற்போது பெரும் உச்சத்தை பெற்றுள்ளார், அவர் மீது கவனமும் அதிகமாக உள்ளது.
எனவே, இதுபோன்ற இளம் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் Emerging Player Of The Season என்ற விருதும், ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த 2024 ஐபிஎல் சீசனுக்கான இந்த விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி பெற்றார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவரின் ஆட்டம் இந்த சீசனில் பலரையும் கவர்ந்தது எனலாம்.
இந்தியாவின் எதிர்காலம்
நிதிஷ் ரெட்டி இந்த சீசனில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 303 ரன்களை குவித்தார், அதில் 2 அரைசதங்களும் அடங்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை தீர்த்தவர்களில் இவரும் ஒருவர் எனலாம். இவர் பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி எஸ்ஆர்ஹெச் அணிக்கு கைக்கொடுத்தார். தற்போது ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக இந்திய அணியில் விளையாடும் நிலையில், வருங்காலத்தில் நிதிஷ் ரெட்டி அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 வயதான நிதிஷ் ரெட்டி, சமீபத்தில் நடந்த ஆந்திரா பிரீமியர் லீக் எனப்படும் உள்ளூர் டி20 தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போயிருந்தார். மார்லிங்கோதாவரி டைட்டன்ஸ் என்ற அணி அவரை ரூ.15.6 லட்சத்திற்கு எடுத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் இருந்து பெரிதாக பேசப்பட்டு வந்த இவர் கடந்த சில நாள்கள் முன் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
தோனியிடம் அது இல்லை
இந்திய அணியின் மூத்த கேப்டன் தோனியின் பேட்டிங் திறனை நிதிஷ் ரெட்டி விமர்ச்சித்ததாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவின. மேலும் நிதிஷ் ரெட்டியின் ஒரு வீடியோவும் வைரலாகி வந்தது. வைரலான அந்த வீடியோவில் நிதிஷ் ரெட்டி,”தோனியிடம் திறமை இருக்கிறது. அது எப்படி என்றால் திறமை இருக்கிறது, ஆனால் போதுமான அளவு டெக்னிக் அவரிடம் இல்லை. அதாவது, விராட் கோலியிடம் இருக்கும் டெக்னிக்கள் தோனியிடம் இல்லை” என பேசியிருந்தார். இதனால், கிரிக்கெட் ஜாம்பவனாக கருதப்படும் தோனி குறித்து இளம் வீரர் ஒருவர் இப்படி மரியாதைக் குறைவாக பேசுவது ஏற்றுக்கொள்ள இயலாது என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இவரை தாக்கினர்.
நிதிஷ் குமார் விளக்கம்
இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில், நிதிஷ் ரெட்டி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு ஸ்டோரியில் அந்த வீடியோ குறித்த அவரின் விளக்கத்தை அளித்துள்ளார். அதில்,”நான் எப்போதும் தோனியின் மிகப்பெரிய ரசிகன். வெற்றிக்கு திறமை முக்கியமா அல்லது மனநிலை முக்கியமா என்பது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நான் தோனியின் உதாரணமாக வைத்து மனநிலைதான் முக்கியம் என பதில் அளித்தேன்.
Nitish Reddy’s latest Instagram story.
– He said “I’ve always been a huge admirer of Mahi Bhai”. pic.twitter.com/rkUEenRXCl
— Tanuj Singh (@ImTanujSingh) June 2, 2024
வெற்றியடைய நல்ல மனநிலை தான் முக்கிய பங்கு வகிக்கிறது என நம்புகிறேன், அதனால் அந்த பதிலை அளித்தேன் . இதற்கு முன் நான் அளித்த பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, சிலர் அதில் முழு வீடியோவின் சிறிய பகுதியை மட்டும் வெளியிடுகின்றனர். எனவே முழு உண்மையை அறியாமல் யாராலும் எதிர்மறை எண்ணங்களை பரப்ப வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளர். தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கும் நிதிஷ் குமாரை வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு அந்த அணி தக்கவைக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக இருக்கும் எனலாம்.