விருத்தாசலம்: கடலூரில் கருடன் திரைப்படம் காணவந்த நரிக்குறவ சமுதாயத்தினருக்கு திரையரங்கில் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை காண நரிக்குறவ சேர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று திரையரங்குக்குள் சென்று டிக்கெட் எடுக்க முயற்சித்தபோது, டிக்கெட் விநியோகிப்பாளர் டிக்கெட் வழங்க மறுத்து, அவர் களை வெளியேறுமாறு கூறி உள்ளார்.
அவர்கள், ‘ஏன் டிக்கெட் தர மறுக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, திரையரங்க நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற போது அங்கிருந்த காவல் துறையினர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அவர்கள் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று. கோட்டாட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து, திரையரங்கு நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட கோட்டாட்சியர் அபிநயா, அவர்களுக்கு அனுமதி மறுத்ததை சுட்டிக்காட்டி, அவர்களை திரைப்படம் பார்க்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, கடலூர் வட்டாட்சியர் பலராமனை, நரிக்குறவ சமுதாயத்தினருடன் அனுப்பிவைத்து, பிற்பகல் காட்சியைக் காண ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து கோட்டாட்சியர் அபிநயாவிடம் கேட்டபோது, “திரையரங்க நிர்வாகம் நரிக்குறவ சமுதாயத்தினர் திரைப்படக் காட்சியைக் காண அனுமதி மறுத்ததற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதால், அவர்களுக்கு திரைப்படம் அனுமதிக்குமாறு திரையரங்கு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினேன். தொடர்ந்து 30 பேரும் பிற்பகல் காட்சியை கண்டு ரசித்தனர்” என்றார்.