புதுடெல்லி: சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.
அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்: அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் 1.15 மணி நிலவரப்படி, பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் அக்கட்சி 45 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஏற்கனவே கிடைத்துவிட்டதால், பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், ஒருவர் மாநில முதல்வர் பெமா காண்டு. தவாங் மாவட்டத்தில் உள்ள முக்டோவில் இருந்து அவர் எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். இந்த தொகுதியில் இதுவரை அவர் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில், மூன்று முறை அவர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சவுகாமில் இருந்து துணை முதல்வர் சவுனா மெய்ன், இட்டாநகரில் இருந்து டெகி கோசோ, தலிகாவில் இருந்து நியாடோ துகாம் மற்றும் ரோயிங்கிலிருந்து முட்சு மிதி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிக்கிம் தேர்தல் முடிவுகள்: சிக்கிம் மாநிலத்தைப் பொறுத்த வரை அங்கு ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 21ல் வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து அக்கட்சி மீண்டும் அட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை 32 இடங்களிலும் போட்டியிட்டன. பாஜக 31 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. புதிய கட்சியான சிஏபி-எஸ் 30 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 12 இடங்களில் மட்டும் போட்டியிட்டது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற எஸ்கேஎம் கட்சி, அதுவரை நடந்து வந்த எஸ்டிஎஃப் கட்சியின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எஸ்கேஎம் கட்சி 17 இடங்களிலும், எஸ்டிஎஃப் கட்சி 15 இடங்களிலும் கடந்த முறை வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.