மதுரை: திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து செல்லும்.
தற்போது அதுபோல் மதுரையின் மற்றொரு பெருமையாக மதுரை கலைஞர் நூலகம் திகழ்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தார்.
ஆசியாவிலேயே பிரமாண்டமான இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு, ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.
நவீன கட்டுமான அம்சங்களுடன் இந்த நூலகப் பிரிவுகள், குழந்தைகள், வாசகர்கள், பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் போட்டித் தேர்வாளர்கள் அனைவரையும் கவரக் கூடிய வகையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் செயல்படுகிறது.
நூலகத்தின் வடிவமைப்பும், அமர்ந்து படிப்பதற்கான சவுகரியமான இருக்கைகளும் வாசகர்களை, நூலகத்தை விட்டு வெளியேற விடாமல் அங்கே படிக்க வைக்கும் உற்சாகத்தை தருவதாக நூலகத்திற்கு வந்து செல்லும் வாசகர்கள் கூறுகிறார்கள். போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ஆய்வு படிப்பு மாணவர்கள், இளைஞர்கள், லேப்டாப்புகளுடன் அவர்களுக்கான நூலக அரங்கில் அமரந்து குறிப்புகள் எடுத்து படிக்கிறார்கள்.
உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்து செல்வதற்கு அனுமதிக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள், இலக்கிய சந்திப்புகள், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சிகள், புத்தகம் வெளியீடு, புத்தக கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இப்படி புத்தகம் வாசிக்கும் சூழலையும், ஆர்வத்தையும் தருகிற கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் பிறந்த நாளில் இந்த நூலகம் இளைய தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
உள்ளூர் மக்கள், வாசகர்களை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள், எழுத்தாளர்கள் அனைவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். அதனால், வாசிப்பு பழக்கத்தை தாண்டி மதுரையில் கலைஞர் நூலகம் எல்லோரையும் கவரக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது. அடுத்த மாதம் ஜூலை 15-ம் தேதி வந்தால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் செயல்பட தொடங்கி ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது.
இதுவரை திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 8 லட்சத்து, 10 ஆயிரம் பேர் வந்துள்ளதாக நூலகர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.