சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வணிகவரித் துறை முன்னணி வகிக்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரித் துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வருவாயின் மூலம் தமிழகத்தின் ஏழை மக்கள் பயன் பெறுகின்ற வகையில், இந்தியாவில் இதுவரை எந்த மாநில அரசுகளும் முன்னெடுக்காத வகையில், விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முன்னணி மாநில மாகவும். முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.
வணிகர்நல வாரியம் மூலமாக குடும்பநல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,399.51 கோடி அதிகமாக ஈட்டப்பட்டு 47.19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வணிகர்கள் பயன்பெறுகின்ற வகையில் ‘சமாதான திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது.
ரூ.62 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வுக்குழு. வருவாய் இழப்புகளை ஆராய இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஹைதராபாத்) புரிந்துணர்வு ஒப்பந்தம், வணிகம் செய்வதை எளிதாக்கி வருவாயை ஈட்டிட எளிய வணிகப் பிரிவு தொடக்கம் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று காலத்தில் சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கு உபயோகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட மருந்துகள், மருத்துவக் கருவிகள், சோதனைக் கருவிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் போன்றவற்றுக்கு 2021- ஆண்டு டிச.31-ம் தேதி வரை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குறைக்கப்பட்டது. சிலவற்றுக்கு விலக்களிக்கப்பட்டது.
அதேபோல், 2023-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காலத்தில் வணிகர்களுக்கு தாமதக் கட்டணம் இன்றி வருடாந்திர வரி விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2024 ஜன. 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழகம் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றிட முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிவரும் பணி அளவிடற்கரியது. அந்த வகையில், வணிக வரித்துறையில் செயல் படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களால் கூடுதலாக கிடைக்கும் வருவாயை உறுதி செய்யும்.