கோவை: கோவை மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் உள்ளன.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை மறுதினம் (ஜூன் 4) நடக்கிறது. கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜிசிடி வளாகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் தொடர்ந்து 24 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தவிர வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். ஜிசிடி வளாகத்துக்கு உள்ளே செல்லும் பணியாளர்கள் சோதனை செய்த பின் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நான்கு மேற்பார்வையாளர்கள் வருகை: கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க ஒரு மக்களவை தொகுதிக்கு இருவர் வீதம் நான்கு மேற்பார்வையாளர்கள் கோவை மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு அதிகாரி வினோத் ராவ் (9489687740), பல்லடம், சூலூர், சிங்காநல்லூருக்கு கிருஷ்ண குணால் (94891 88330).
பொள்ளாச்சி தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளுக்கு அனுராக் செளத்ரி(9489606740), வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு நிதிஷ்குமார் தாஸ் (9489322366).
வாக்கு எண்ணிக்கை பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களை வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மேற்பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்.