விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் முகல்ராஜ புரம், பயாகாபுரம், அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீரில், கால்வாய் நீர் கலந்ததால், அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இதில் இதுவரை முகல்ராஜபுரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். நேற்று இதே பகுதியை சேர்ந்த கோட்டேஸ்வர ராவ் (60) என்பவர் உயிரிழந்தார். மேலும், பயாகாபுரம் மற்றும் அஜித்சிங் நகர் ஆகிய பகுதிகளில் 2 பெண்கள், ஒரு சிறுவன் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவ துறை சார்பில் இப்பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. கால்வாய் குழாய்கள் பழுது பார்க்கபட்டன. கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு இப்பகுதிகளில் முகாமிட்டு நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று சந்திரபாபு நாயுடு. “மருத்துவம் மற்றும் சுகாதார குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்க்க வழி வகுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.