இளையாராஜாவின் உண்மையான பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி. ஆனால், அன்று கலைஞரின் பிறந்த நாள் என்பதால் அவரை மதிக்கும் விதமாக தனது பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுவதாக அறிவித்தார்.
இதுபற்றி அப்போது பேசிய இளையராஜா, “ஜூன் 3ம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்த நாள். தமிழுக்கு அவர் செய்த சேவையில் கொஞ்சம் கூட நான் செய்ததில்லை. இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருவது மகிழ்ச்சிதான். ஆனால், ஜூன் 3ம் தேதி அன்று தமிழ்நாடு கலைஞரின் பிறந்த நாளை மட்டுமே கொண்டாட வேண்டும். நான் என் பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடிக் கொள்கிறேன்”என்று கூறினார். அதன்பிறகு ஆண்டுதோறும் ஜூன் 2ம் தேதியை இளையராஜாவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இசைஞானியின் பிறந்தநாளை ஒட்டி, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இளையராஜா’ திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம். ஆனால், இந்த 80வது பிறந்த நாள் அவருக்கு சோகமாக அமைந்துவிட்டது. இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஜனவரி 25ம் தேதி காலமாகிவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “இந்த ஆண்டு என் பிறந்த நாளை நீங்கள்தான் கொண்டாடுகிறீர்கள். எனக்கு வாழ்த்துகள் சொல்கிறீர்கள்.
ஆனால், இந்த ஆண்டு பிறந்த நாள் எனக்கு சோகமாக அமைந்திருக்கிறது. நான் என் மகளை பறிகொடுத்தத காரணத்தால் எனக்கு இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் இல்லை. உங்களுக்காகத் தான் இந்த பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம்” என்று பேசியிருக்கிறார்.