ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’.
1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஜூன் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், “‘இந்தியன் 2’ திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிலதான் சொன்னாங்க. அப்போ நான் பேக் ஸ்டேஜ். இந்த நேரு ஸ்டேடியம்ல நிறைய விழாகளை இயக்கியிருக்கேன். 2.0 படத்தோட விழாவையும் நான்தான் இயக்கினேன். அடிக்கடி ரஜினி சார், சங்கர் சாரோட உழைப்பைப் பத்தி பாராட்டி பேசிட்டே இருப்பாரு. அவரு நான் எழுந்து போறதை பார்த்துட்டு அப்படி சொன்னாரானு தெரில. பிக் பாஸ்ல நிறைய டாஸ்க் வைப்பாங்க.
தமிழ்ல எழுதுறதுல பிழை விட்டுருவாங்க. அதுக்கு அவர் பயங்கரமாக கோபப்படுவார். அப்படி ஒரு நாள் பேக் ஸ்டேஜ் வந்து என்னை பாத்து தப்பு இருக்குனு சொன்னாரு. எனக்குத்தான் தப்பு எதுனே தெரியாதே. அவர் திட்டுறதைக் கூட நான் பெருமையா எடுத்துக்குவேன்” என கலகலப்பாகப் பேசினார்.