டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார். 21 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த அடுத்தநாள் சிறையில் சரணடைய வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, சிறையிலிருந்து வெளிவந்த முதல்நாள் முதல் பா.ஜ.க-வை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், `பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும். எங்களை நீங்கள் வெற்றிபெறவைத்தால்தான் மீண்டும் நான் சிறைக்கு செல்லாமலிருப்பேன்’ என்று கூறிவந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல்செய்தார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலின் மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கெனவே குறிப்பிட்ட ஜூன் 2-ம் தேதி சிறையில் சரணடையுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று சிறையில் சரணடைய கெஜ்ரிவால் ஆயத்தமாகியிருக்கிறார்.
இதுகுறித்து கெஜ்ரிவால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் 21 நாள்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வெளியில் வந்தேன். இன்று திகார் சிறையில் சரணடைகிறேன். சரியாக மூன்று மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி முதலாவதாக ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவேன்.
பின்னர், கன்னாட் பிளேஸிலுள்ள ஹனுமன் கோவிலுக்குச் சென்று ஹனுமனின் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்குச் சென்று அனைத்துத் தொண்டர்களையும் கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். அதைத்தொடர்ந்து திகாருக்குச் செல்வேன். நீங்கள் அனைவரும் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். சிறையிலிருந்து நானும் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிறையில் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.