ஆர்டர் போடாதீங்க… Zomato போட்ட பதிவு – உற்றுப் பார்க்கும் மக்கள்… என்ன மேட்டர்?

Zomato: வழக்கத்தை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது தாங்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. உதாரணத்திற்கு, கடந்த மே 29ஆம் தேதி டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த அளவிற்கு வெப்பம் கடுமையாக இருக்கும் சூழலில், மதிய பொழுதுகளில் வெயிலில் நடமாடினால் அவர்களுக்கு நிச்சயம் உடல்நல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. 

இந்தியா முழுவதும் இந்த கோடை காலத்தில் அதாவது மே 31ஆம் தேதி வரை மட்டும் மொத்தம் 61 பேர் வெப்பத்தின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடைசி கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்ட 23 பேரும் இதில் அடக்கமாகும். இது வட மாநிலங்களில் மட்டுமில்லை கடந்த சில நாள்களாக சென்னையிலுமே அதிக வெப்பம் பதிவாகியிருந்தது. 

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாலும், கோடை காலத்தில் இம்முறை இடையில் கோடை மழை சற்று ஆறுதலாகவும் இருந்ததால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்தது எனலாம். ஆனாலும், வெயிலில் செல்வோருக்கும் கடும் பாதிப்பு இங்கும் ஏற்பட்டது. சாதாரணமாக அவ்வப்போது வெயிலில் செல்வோருக்கே இந்த நிலைமை என்றால் கடும் வெயிலில் டெலிவரி செய்யும் Swiggy, Zomato, OLA, Uber, Dunzo, Rapido உள்ளிட்ட நிறுவனங்களின் பணியாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்…

அந்த வகையில், அவர்களுக்கான நலனை உறுதிசெய்வதில் அந்தந்த நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன. சமூக வலைதளங்களிலும் பலர் இதுகுறித்து பதிவிட்டிருந்தனர். உச்சி பொழுதுகளில் நீண்ட தூர ஆர்டர் செல்வது, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெயிலில் செல்வது இதுபோன்ற டெலிவரி பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்நிலையில், பணியாளர்களின் நலன் குறித்து Zomato நிறுவனம் அதன் குரலை பதிவு செய்துள்ளது. Zomato நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் டெலிவரி பார்ட்னர்களின் நலனை கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை வைத்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில்,”தயவு செய்து மதியம் உச்சி பொழுதில் அவசியமின்றி ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து நெட்டிசன்களும் இந்த பதிவின் கீழ் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் பலரும் கூறுவது, மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை Zomato செயல்படாது என அறிவித்துவிட்டால் யாருமே ஆர்டர் செய்யப்போவது இல்லையே என பதிலளித்து வருகின்றனர். இப்படி மக்களிடம் கோரிக்கை வைப்பதற்கு பதில் நேரடியாகவே சேவை நிறுத்திவைத்தால் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காதே என ஐடியா கொடுத்து வருகின்றனர். 

மறுபுறம், மதிய சாப்பாட்டை ஆர்டர் செய்பவர்கள் என்ன செய்வது என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆர்டர் போடுவதில் என்ன அவசியமானது, அவசியமில்லாதது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உணவு ஆர்டர் போடுவதே அவசியத்திற்குதான் இதில் அவசியமில்லாதது என குறிப்பிடுவது என்னவென்று புரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.