1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மக்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடவும் என உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) கடந்த மே 13 முதல் 15 ஆம் திகதி வரை புத்தளம் மாவட்டத்தில் பல கூட்டங்களை நடத்தியது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டங்களின் போது, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் புத்தளம் மக்களின் முக்கிய பிரச்சினைகளையும் தேவைகளையும் அடையாளம் காண்பதற்காக பல்வேறு பங்குதாரர்களுடன் 09 அமர்வுகள் நடத்தப்பட்டன.
நிர்வாக ரீதியான சவால்கள் மற்றும் வள ஒதுக்கீடு தொடர்பில் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் டபிள்யூ.எம்.எஸ்.ஜி கருணாரத்ன ஆகியோரைச் சந்தித்து இந்தக் குழு கலந்துரையாடியது.
மேலும், பிராந்திய செய்தியாளர்களுக்கான ஊடகச் சந்திப்பு நடத்தப்பட்டதுடன், இடைக்கால செயலகத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டது. வனாதவில்லு மற்றும் கல்பிட்டி கிராம மக்களுடனான சந்திப்புகள் அந்தந்த பிரதேச செயலகங்களில் நடைபெற்றதோடு இதன் போது உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதே சமயம் சிரம்பியடியில் உள்ள இலங்கை ஆபிரிக்க சமூகத்துடனான கலந்துரையாடலின் போது அவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் பற்றி ஆராயப்பட்டது.
உத்தேச சட்டத்திருத்தம் குறித்து ஆராயவும் அவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்காகவும் பிரதேச செயலகத்தில் புத்தளம் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் இக்குழுவினர் மே 14 ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்தினர்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனசபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சமூக மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இது தவிர பிரதேச செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புத்தளம் மாவட்டத்தின் நிர்வாகம் மற்றும் வள முகாமைத்துவ பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இறுதி நாளான மே 15-ஆம் திகதி முகத்துவாரம் மீனவ கிராமத்தில் உள்ள கிராம மக்களிடம் அவர்களுக்கே தனித்துவமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் போதிய வளப்பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் தரம் பாதிக்கப்படுவதாக இந்தக் கலந்துரையாடல்களின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், மண் அரிப்பைத் தடுப்பது மற்றும் வனவளத்துறை மூலம் காணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் கவனம் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் புத்தளத்தில் நடைபெற்ற கூட்டங்களில் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மக்களுக்கு தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிகளுக்கு இங்கு சேகரிக்கப்படும் தகவல்கள் முக்கிய உதவியாக இருக்கும் என அதன் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் கொள்கைப் பிரிவின் தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, இணைப்பாளர் சரத் கொத்தலாவல, நிறைவேற்று அதிகாரி (பொது உறவுகள்) தனுஷி டி சில்வா மற்றும் சௌமியா விக்கிரமசிங்க, நிறைவேற்று அதிகாரி (சட்டம்) வை.எல்.லொகுனாரங்கொட மற்றும் இடைக்கால செயலக அதிகாரிகள் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.