“தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர்!” – கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கருணாநிதியின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பொது வாழ்வில் நீண்ட காலம் இருந்த அவர், தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். அறிவுக்கூர்மை காரணமாக பெரிதும் மதிக்கப்படுபவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்த தருணங்கள் உள்பட பல முறை நான் அவருடன் உரையாடி இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து அவருடைய அனுபவ வார்த்தைகளைக் கேட்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரது அறிவுரைகளால் பலனடைந்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, “தன் எண்ணங்களாலும் செயல்களாலும் தேசத்திற்கு சேவை செய்த இந்தியாவின் மகத்தான புதல்வர் கருணாநிதி. தன் வாழ்நாள் முழுவதும் தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தமிழகம் மட்டுமல்லாது தேசத்தைப் பற்றி சிந்தித்தவர். அவருடன் ஒரு சிறந்த உறவு எனக்கு இருந்தது. அந்த பெரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என கூறினார்.

கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர் அவர். சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்கள் மீது அவரது வாழ்க்கை நீடித்த முத்திரையை பதித்துள்ளது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.