பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி 21 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு மீதான தடை உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) மறுத்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா தலைமையிலான நீதிபதிகள் குழுவினால் இந்த மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது தோட்ட கம்பனிகள் சார்பில் கோரப்பட்ட தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சார்பாக ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவும், தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் சம்பள சபையின் செயலாளர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூவும் ஆஜராகியிருந்தனர்.

 

சம்பளச் சபையைக் கூட்டிய போது தோட்டக் கம்பனிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும், தொழில் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் தொழில் ஆணையாளர் சம்பளத்தை அதிகரிக்க சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சட்ட அதிகாரம் உள்ள ஒருவரால் கையொப்பமிடப்படவில்லை என ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா இதன் போது சுட்டிக்காட்டினார் .

 

இவற்றை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தோட்டக் கம்பனிகள் கோரிய தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.