திருவண்ணாமலை: ‘மக்களின் எண்ணங்களை கருத்துக் கணிப்பு பிரதிபலித்துள்ளது’ என்று, திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாக உள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுச்சேரி மாநில உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சரும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். விநாயகர், மூலவர் மற்றும் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். பின்னர் நவகிரகங்களுக்கு தீபம் ஏற்றி வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: ‘இந்திய மக்களின் பேராதரவு, கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சி அமைப்பார். இதன் வெளிபாடுதான், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள். அவை, மக்களின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளது. பிரதமராக யார் வந்தால் நாடு வளர்ச்சியடையும் என்பதற்கு கருத்துக் கணிப்பு முடிவே எடுத்துக்காட்டாகும். நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று அனைவரும் வெற்றி பெற வேண்டும்.
பிரதமருக்கு பக்கபலமாக இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். உலகமும் நாடும் செழிக்க வேண்டும் என இறைவன் அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொண்டேன். எங்களுக்கான வெற்றி கிடைக்கும் என நம்புகின்றோம்” என்றார்.
முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. அண்ணாமலையார் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 1-ம் தேதி சுவாமி தரிசனம் செய்த நிலையில், அவரைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.