கன்னியாகுமரிக் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையில் கடந்த 30-ம் தேதி தொடங்கி இன்று மாலை வரை மூன்று நாள்கள் தியானம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.
முதல் நாள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுப் படகு மூலமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்று தியானத்தைத் தொடங்கினார். விவேகானந்தர் நினைவுப் பாறை அருகே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை சமர்ப்பித்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் படகுமூலம் கரைக்கு வந்து, அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் தியானத்திற்காக மூன்று மணி நேரத்தில் தேக்கு மரத்தால் ஆன தியான இருக்கை தயாரித்துள்ளார் நாகர்கோவில் அடுத்த கீழச்சங்கரங்குழிப் பகுதியைச் சேர்ந்த மரத்தொழிலாளி சிவநேசன். இதுகுறித்து சிவநேசன் கூறுகையில்,
“நான் அரசு அதிகாரிகள் சிலருக்கு மர பர்னிச்சர் வேலைகள் செய்து கொடுத்துள்ளேன். இந்த நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக தியான இருக்கை ஒன்று வேண்டும் என அதிகாரிகள் கடந்த 30-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் என்னிடம் கூறினார்கள்.
பிரதமர் மோடி அமரும் தியான இருக்கை செய்யும் வாய்ப்பு வந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக மரக்கடை வைத்திருக்கும் எனது நண்பரின் வீட்டுக்குச் சென்று அவரை எழுப்பிக் கடையைத் திறக்கச் செய்து தேவையான தேக்குமரங்களை வாங்கிக்கொண்டேன். உதவிக்கு என்னுடன் பணி செய்யும் சக தொழிலாளர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு காலை 10 மணிக்கு வேலையைத் தொடங்கினோம். 12 மணிக்கு பாலீஸ் போட்டு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டோம். பின்னர் தியான இருக்கையை அதிகாரிகள் கூறிய இடத்தில் கொண்டு ஒப்படைத்துவிட்டோம்.
சாதாரணமாக தேக்கு மரத்தில் தியான இருக்கை செய்து முடிக்க மரத்துடன் சேர்த்து 25,000 ரூபாய் ஆகும். குறைந்த நேரத்தில் வேகமாக செய்ததால் சற்று கூடுதல் தொகை செலவு ஆனது. தியான இருக்கையின் கால்களுக்கான கடைசல், டிசைன் அனைத்தும் சரியாக அமைத்தோம்.
6 இன்ச் உயரம், 3 அடி நீளம், 2.5 அடி அகலம் 2.5 அடி நீளத்தில் அந்த தியான இருக்கையைத் தயாரித்தேன். அதில் 3 இஞ்ச் உயரத்துக்கு குஷன் போட்டிருந்தார்கள். நாட்டின் பிரதமர் நான் தயாரித்த இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பார்த்ததும் பணி செய்ததற்கான திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைத்தது.
எனது அப்பா விவசாயம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள். அதனால் எனது படிப்பை 5-ம் வகுப்புடன் முடித்துக்கொண்டு கூலி வேலைக்குச் சென்றேன். மர வேலைகளில் ஈடுபாடு அதிகரித்ததால் அதில் என் கவனத்தைச் செலுத்தினேன். 27 வயதில் நான் முழு நேரமாக மர வேலை செய்யத்தொடங்கினேன். இப்போது 52 எனக்கு வயது ஆகிறது. எனக்கு ஒரு மகன், ஒருமகள். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். 130 கோடி மக்களின் பிரதமர் நான் செய்த தியான இருக்கையில் அமர்ந்து தியானம் செய்ததை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பு என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் என்றே நினைக்கிறேன். ரொம்ப திருப்தியாக இருக்கிறது” என்றார்.