சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் 3 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடியை பறக்கும்படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கும் சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி கேசவ விநாயகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த புலன் விசாரணை சட்டவிரோதமானது என்பதால் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு விசாரணைக்கு ஆஜராவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். விசாரணை அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்டதால், சட்டவிரோதமான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும், என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை சட்டவிரோதமானது என எப்படி கூற முடியும்? விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விசாரித்த நீதிபதி, தேர்தல் பறக்கும் படையினரால் இந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, உரிய விளக்கமளிக்க வேண்டும், என்றார். அப்போது சிபிசிஐடி தரப்பில், பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.