கயானா,
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
2-வது நாளான நேற்று கயானாவில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசும், பப்புவா நியூ கினியாவும் (சி பிரிவு) மோதின. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த குட்டி அணியான பப்புவா நியூ கினியா, வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சில் திணறியது. ரோமன் பவெல் முதல் 6 ஓவர்களுக்குள் 5 பவுலர்களை பயன்படுத்தி வித்தியாசமான யுக்தியை கையாண்டார். அதற்கு பலன் கிடைக்காமலும் இல்லை. பவர்-பிளேவுக்குள் பப்புவா 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மந்தமாக ஆடிய அந்த அணி முதல் 12 ஓவர்களில் 67 ரன்களே எடுத்தது.
137 ரன் இலக்கு
அதன் பிறகு மிடில் வரிசையில் செசி பா ஓரளவு வேகமாக விளையாடி அணியை கவுரவமான நிலைக்கு நகர்த்தினார். அவர் அரைசதம் (50 ரன், 43 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்த நிலையில் போல்டு ஆனார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கிப்ளின் டோரிகா 27 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி 8 விக்கெட்டுக்கு 136 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ஆந்த்ரே ரஸ்செல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கு என்றாலும் வெஸ்ட் இண்டீசும் அதை அடைய தடுமாறத் தான் செய்தது. பப்புவா பவுலர்கள் ஆட்டத்தை 19-வது ஓவர் வரை இழுத்து சென்று ஆச்சரியப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் 42 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரஸ்செல் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக பிரன்டன் கிங் 34 ரன்களும், நிகோலஸ் பூரன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டம் மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.