விமர்சனம் செய்வது எளிதானது – தீர்வு காண்பது கடினமானது

• நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முறையான திட்டம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் இல்லை

 

• பழைமையான அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

 

• பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மாற்றுத் திட்டம் ஏதேனும் இருந்தால் முன்வைக்கவும்.

 

• அன்றேல் பொருளாதார பரிமாற்றச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் – ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைமையான அரசியலில் ஈடுபடலாம் என எவரும் எண்ணிவிடக் கூடாது எனவும், முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

எனவே, விமர்சனம் செய்து கொண்டிராமல் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, விமர்சனம் செய்வது இலகுவானது எனினும் தீர்வு வழங்குவது கடினமானது எனவும் தெரிவித்தார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) பிற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

 

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் திட்டம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்தகைய திட்டம் இருந்தால் அதனை முன்வைக்குமாறும், இல்லை என்றால் நாட்டின் எதிர்காலத்திற்காக பொருளாதாரப் பரிமாற்ற சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் சகலரிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

 

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது,

 

4 வருடங்களுக்கு முன்னர் நாம் ஒரு தலைப்பின் அடிப்படையில்தான் தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. 2020 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வரி குறைக்கப்பட்டதால் வருமானம் வீழ்ச்சியடைகிறது. அந்நியச் செலாவணி இழக்கப்படுகிறது. எனவே, இந்த நாட்டிற்கு 3 பில்லியன் டொலர் கையிருப்பைப் பெறுவதே எங்களின் முதல் பணியாகும் என அன்று அறிவித்தோம். அப்போது யாரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களில் ஒரு குழு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்காக விலகிச் சென்றது.

 

ஜே.வி.பி நகைத்தது. மொட்டுக் கட்சி விமர்சித்தது. ஐக்கிய தேசியக் கட்சி தனிமைப்பட்டது. ஆனால் நாங்கள் அதை விட்டு விலகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் உண்மையின் பக்கமே நின்றது. எவ்வளவு கசப்பாக இருந்தாலும் உண்மையைப் பேசியது.

 

அன்று நாம் அனைவரும் இணைந்து அந்தத் தொகையைத் தேடியிருந்தால் இன்று இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. கடைசியில் பிரச்சினையில் சிக்கி ஏனைய நாடுகளிடம் உதவி கேட்டபோது இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர் வழங்கியது.

 

அந்த மூன்றரை பில்லியனைக் கொண்டு ஒன்றரை வருடங்கள் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தினோம். 2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் இந்த நாட்டிற்கு இவ்வாறான கதி ஏற்பட்டிருக்காது.

 

உணவு இல்லை, உரம் இல்லை, எரிபொருள் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டன, வருமான வழிகள் இல்லை. அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையிலே போராட்டம் தொடங்கியது. மொட்டுக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. மே 9 அன்று காலி முகத்திடலுக்கு வந்த எதிர்கட்சித் தலைவரையும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவையும் துரத்தினர்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பிரதாய முறைப்படி சஜித் பிரேமதாசவிடம் கோரினார். ஆனால் அதற்கு அவர் முன்வரவில்லை. பிரேமதாசவோ ஜே.ஆர்.ஜயவர்தனவோ இருந்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டிருக்க மாட்டார்கள். அதுதான் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியின் போக்காகும்.

 

ஜே.வி.பியும் தப்பிச் சென்றது. அவர்களில் யாரிடமும் தீர்வு இருக்கவில்லை. பழைமையான அரசியலை மேற்கொண்டு, பொய்யாக நடக்கும் இவர்களிடம் தீர்வு இருக்கவில்லை.

 

என்னிடம் தீர்வு இருந்ததால் பயமின்றி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். முன்னர் கூறியதுபோல் 3 பில்லியன் டொலர் கிடைத்தால் இந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என அறிந்திருந்ததால் அதற்கேற்ப செயற்பட்டேன். பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபட்டேன். இந்நாட்டு மக்கள் 2023 கிறிஸ்மஸ் பண்டிகையையும் கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகை என்பவற்றையும் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதைப் பார்க்கும்போது வித்தியாசம் தெளிவாகிறது.

 

விவசாயிகளுக்கு இன்று நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. ஆனால் நாம் இன்னும் இந்த நெருக்கடியிலிருந்து மீளவில்லை. அன்றாட வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்களுக்கு சமுர்த்தியை போன்ற மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அரிசி மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் உறுமய திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிரந்தரக் காணி உரிமைகள் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் மாதத்தில் கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 பேருக்கு அந்த வீடுகளுக்கான உரிமை வழங்கப்படும்.

 

2023 ஆம் ஆண்டின் இறுதியில் 83 பில்லியன் டொலர் கடனாக இருந்தது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். உங்கள் மொத்த ஆண்டு வருமானத்தை விட அதிகமாக இருந்தால் எப்படி கடனில் இருந்து விடுபட முடியும்? அதற்கு புதிய வருமான வழிகளை உருவாக்கி முன்னேற வேண்டும். அடுத்த 5 வருடங்களில் இந்தப் பொருளாதார ஸ்திரத்தன்மையை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளோம். அதை மீறினால் மீண்டும் அவர்களின் ஆதரவு கிடைக்காது.

 

எங்களின் வெளிநாட்டுக் கடனை அடைக்க 2027 முதல் 2042 வரை கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளோம். அதற்கேற்ப இந்தப் பொருளாதாரத்தை எப்படி முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கடனை செலுத்துவது மட்டுமல்ல, இன்னும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுக் கடன் வாங்க வேண்டியுள்ளது.

 

அந்த நிலையில் தற்போதைய 83 பில்லியன் டொலர் கடன் தொகை இன்னும் அதிகரிக்கும். அப்போது இன்னும் 5 வருடங்கள் கடந்து நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி உருவாகும். அப்படியானால், எப்படி முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் இப்போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும்.

 

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க புதிய சட்டங்களைக் கொண்டு வரஇருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பியோட எந்தக் கட்சிக்கும் இடமளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் இருந்து எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் யாரும் ஓடிவிடுவது நல்லதல்ல. மேலும் இந்த பிரச்சினையில் இருந்து ஊடகங்கள் தப்பி ஓடுவது நல்லதல்ல. இந்த விடயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

 

ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்தப் பிரச்சினையிலிருந்து நாட்டைக் காப்பாற்றினோம். இப்போது நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எந்தவொரு கட்சியும் இதுவரை தமது வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. அவர்களால் அதை முன்வைக்க முடியாது. ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை சட்டப்பூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 

நாட்டின் பொருளாதாரத்தை இறக்குமதி பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வகையில் இந்த சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அந்த இலக்குகளின்படி செயல்பட்டால்தான் இந்த நாடு அபிவிருத்தி அடையும்.

 

மொத்த தேசிய உற்பத்தியில் 100 இற்கு மேல் இருக்கும் கடனை 2032 இற்குள் 95% ஆகக் குறைக்க வேண்டும். அதுதான் முதல் விடயம். அதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சந்திக்க வேண்டிய அடுத்த பிரச்சினை இதுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

 

மேலும், 2027 இற்குள் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5% ஆக அதிகரிக்க வேண்டும். நாம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டுமானால், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது குறைந்தது 10 ஆண்டுகளுக்கு 8% ஆக இருக்க வேண்டும். மேலும், 2025 இற்குள் வேலையின்மை 5% ஆக குறைக்கப்பட வேண்டும். ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற, 2025 ஆம் ஆண்டுக்குள் நமது ஏற்றுமதி வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 25% ஆக இருக்க வேண்டும்.

 

2030 இல் இது 40% ஆக வேண்டும். 2040 இற்குள் 60% ஆக இருக்க வேண்டும். இந்த இலக்கின்படி, 2040 இல் நமது நாடு ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற வேண்டும். அதை நிறைவேற்ற அந்நிய முதலீடுகள் அவசியம். 2030 இற்குள், வெளிநாட்டு முதலீடு குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். அதேசமயம் நாம் பெறும் வெளிநாட்டு முதலீடுகள் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

 

இந்த இலக்குகளுடன் நாம் தொடர்ந்து பயணித்தால், நாடென்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியும். இந்த இலக்குகளை ஏற்கிறீர்களா இல்லையா என்பதை நான் அனைவரையும் கேட்க விரும்புகிறேன். பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், அல்லது வேறு ஏதேனும் திட்டம் இருந்தால் முன்வைக்குமாறு அனைவரையும் கோருகிறேன்.

 

சர்வதேச நாணய நிதியம் இன்றி பணம் பெற வேறு வழியில்லை. எதையாவது பேசலாம். ஆனால் தீர்வு இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சிலர் கூறுகின்றனர். கடைக்குச் சென்று இன்னும் ஒரு மாதம் கடன் தருமாறு முதலாளியிடம் கேட்பதைப் போன்று இவற்றைச் செய்ய முடியாது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். இரண்டு வருடங்கள் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

 

எனவே, தவறான கருத்துக்களை வெளியிடாமல், இது குறித்து முறையான வேலைத்திட்டம் இருந்தால், அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் இந்தத் திட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2020 இல் இதைப் பற்றி நாம் சொன்னபோது அனைவரும் அதனை நிராகரித்துவிட்டனர். அதனால்தான் இந்த நிலைக்கு வந்தோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டத்தை நாம் நிராகரித்தால், நாம் மேலும் படுகுழியில் விழ நேரிடும்.

 

எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும். அத்தகைய திட்டம் யாரிடமும் இல்லை என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விமர்சனம் செய்வது எளிது. ஆனால் தீர்வு வழங்குவது கடினமானது. எனவே குறை கூறாமல் தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.