கொல்கத்தா: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அதனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
“ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே சிலரை கொண்டு தயாரித்தது தான் தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை.
2016, 2021 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன ஆனது என்பதை நாம் பார்த்துள்ளோம். மத்தியில் அமையும் இண்டியா கூட்டணி ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிப்பதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என நான் கருதுகிறேன். எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் இணைவோம். மற்ற பிராந்திய கட்சிகளை போலவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இயங்கும்” என மம்தா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 21 முதல் 24 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 18 முதல் 21 இடங்களையும் வெல்லும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. கடந்த 2019-ல் பாஜக 18 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்று இருந்தது. காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
கருத்துக் கணிப்பு முடிவுகளை போலி என இண்டியா கூட்டணி கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் ஆகியோர் இதனை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க >>> “பொறுத்திருந்து பாருங்கள்” – கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து சோனியா காந்தி கருத்து