34 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் உள்ள 34 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் ஏப்ரல், செப்டம்பர் என ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 34 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. பாஸ்டேக் முறை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதால் கட்டண உயர்வுஅமலாகவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஜூன் 1) முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

4 முதல் 5 சதவீத உயர்வு: இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று காலை வெளியானது. அதன்படி, ஆத்தூர், பரனூர்,சூரப்பட்டு, வானகரம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் 4 முதல் 5 சதவீதம்வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வானகரத்தை பொருத்தவரை, கார்கள் ஒரு முறை பயணிக்க ரூ.50-ல் இருந்து ரூ.55 ஆகவும், சென்று திரும்புவதற்கு ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,705-ல்இருந்து ரூ.1,750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வர்த்தக வாகனத்துக்கான பாஸ் கட்டணம் ரூ.2,760-ல் இருந்து ரூ.2,830 ஆகவும், கனரக கட்டுமான இயந்திரங்களுக்கு ரூ.9,060-ல் இருந்து ரூ.9,290 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல, பல்வேறு இனங்களில் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதே கோரிக்கையை கனரக வாகன உரிமையாளர்களும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.