இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா வெளியிட்ட நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தை தொடர்ந்து 40,000 முன்பதிவுகளை முதல் மாதத்தில் பெற்றுள்ள நிலையில், 19,393 கார்களை நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளது.
குறிப்பாக மாருதியின் மே 2024 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1,74,551 ஆக பதிவு செய்திருந்தாலும், முந்தைய ஆண்டு இதே மாதம் 1,78,083 ஆக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பீடுகையில் 2 % வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதம் 26,477 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி, கடந்த 2024 மே மாதம் 17,367 ஆக சரிந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, “நாங்கள் இப்போது பெட்ரோல் வகை Swift காரை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளோம், சிஎன்ஜி மாறுபாடு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் பெட்ரோல் வகை மாடலுக்கான தற்பொழுது வரை 40,000 முன்பதிவுகள் பெற்றுள்ள நல்ல வரவேற்பாக கருதுகின்றோம். மேலும் அறிமுகமான முதல் மாதத்தில் ஸ்விஃப்ட்டுக்கான நல்ல துவக்கமாக நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்தார்.
மேலும், புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் என்ஜின் பெற்ற ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவில் AGS வகை வெறும் 17% மட்டுமே உள்ள நிலையில் மீதமுள்ள 83% முன்பதிவுகள் மேனுவல் கியர்பாக்ஸ் பெறுள்ளது.