சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதனால் இப்பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ., கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 5-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
6-ம் தேதி ஒருசில இடங்களிலும், 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.