இந்தாண்டு அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார் தனுஷ். ‘கேப்டன் மில்லர்’ படத்தை தொடர்ந்து அடுத்து அவரது 50வது படமான ‘ராயன்’ ரிலீஸாகிறது.
இதனைத் தொடர்ந்து ‘குபேரா’வும் வெளி வரும் என்கின்றனர். இப்போது ‘ராயன்’ வெளியீடு தள்ளிப்போகிறது என்று கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

சினிமாவில் அரை சதத்தைக் கடந்து சிக்ஸர் அடித்து வருகிறார் தனுஷ். அவரது 50வது படமான `ராயன்’ ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதால், ரிலீஸ் வேலைகள் பரபரக்கின்றன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், ஜெயராம், துஷாரா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி எனப் பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் `அடங்காத அசுரன்’ என்ற சிங்கிள் லிரிக் வீடியோவும், அடுத்த சிங்கிளான `வாட்டர் பாக்கெட்’ பாடலும் வெளியாகியிருக்கிறது.
தவிர படம் இம்மாதம் (ஜூன் ) 13ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், படத்தின் இசை வெளியீடும் ‘இந்தியன் 2’ இசை வெளியீட்டைத் தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘ராயன்’ ரிலீஸை அடுத்த மாதம் தள்ளி வைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே ஜூலை முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடும் நடைபெறலாம் என்கின்றனர்.

அனேகமாக ஜூலை மூன்றாவது வாரத்தில் படத்தின் ரிலீஸ் இருக்கலாம் என்கின்றனர். தனுஷே இயக்கி நடித்திருப்பதால், ‘குபேரா’ படப்பிடிப்பிற்கு நடுநடுவே சென்னை வந்து ‘ராயன்’ எடிட்டிங்கையும் கவனித்தார். இப்போது முழுப்படமும் தயாராகிவிட்டது. படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் படம், திருப்தியாக வந்திருப்பதால், தனுஷை பாராட்டியுள்ளனர்.
தனுஷின் 51வது படமான ‘குபேரா’ படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. சேகர் கம்முலா இயக்கி வரும் இப்படம் தெலுங்கு, தமிழ் என தயாராகி வருகிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா எனப் பலரும் நடித்து வருகிறார்கள். பாங்காக் ஷூட்டிங்கைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அடுத்தடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இப்போது நாகார்ஜுனா – தனுஷ் காம்பினேஷனின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்போது நடந்து வரும் ஹைதரபாத் ஷெட்யூலைத் தொடர்ந்து, முழுப்படப்பிடிப்பும் இம்மாதமே நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முடித்துவிட்டே அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். அனேகமாக அது ‘இளையராஜா’ படத்தின் பயோபிக் ஆக இருக்கலாம். அல்லது மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை இயக்கி முடித்துவிட்டாரென்றால், அடுத்து தனுஷை இயக்கத் தயாராவார் என்றும் சொல்கிறார்கள்.
மேற்கண்ட படங்களுக்கிடையே, தனுஷ் அடுத்ததாக இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பும் ஒரு பக்கம் சீறிப்பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு கடைசியில் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.