Doctor Vikatan: என்னுடைய வயது 42. என் மனைவியின் வயது 36. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் HR ஆக பணிபுரிகிறேன். நான் பணி நிமித்தமாக நாள்தோறும் 50 -60 கிலோமீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்கிறேன். வாரம் ஒரு நாள் தாம்பத்திய உறவின்போது கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. டூவீலர் ஓட்டுவதுதான் இந்த வலிக்குக் காரணமா, வேறு ஏதேனும் பிரச்னையா? இதற்குத் தீர்வு கூறுங்கள்.
-Ramesh, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.
டூ வீலரில் தினமும் நீண்டதூர பயணம் மேற்கொள்வது என்பதே உடலளவில் அசதியை ஏற்படுத்துகிற ஒரு விஷயம்தான். நீங்கள் எந்தத் தோரணையில் (posture) உட்கார்ந்து வண்டி ஓட்டுகிறீர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சரியான பொசிஷனில் உட்கார்ந்து வண்டி ஓட்டாத பட்சத்தில், அதுவே உங்கள் முதுகுத தசைகளை பலவீனமாக்கி, இன்ஃபளமேஷன் (Inflammation) எனப்படும் வீக்கம் உருவாகவும் காரணமாகலாம். அது உங்கள் முதுகெலும்பையும் பாதிக்கும். வண்டி ஓட்டும்போது உங்களுக்கு முதுகு வலி இருக்கிறதா அல்லது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது மட்டும் வலிக்கிறதா என்று கவனியுங்கள்.
தினமும் 50-60 கிலோமீட்டர் வண்டி ஓட்டும்போது முதுகில் வலியை உணர்ந்தால், தாம்பத்திய உறவின்போது நீங்கள் உணரும் முதுகு வலிக்கும் முதுகுப் பகுதி தசைகள் ஸ்ட்ரெயின் ஆவது தான் காரணம் என புரிந்துகொள்ளலாம்.
அதுவே, வண்டி ஓட்டுமபோது வலி இல்லை, தாம்பத்திய உறவின்போது மட்டும் வலிக்கிறது என்றால் உங்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம். ஆண் இனப்பெருக்க உறுப்புகள், புராஸ்டேட் போன்றவற்றை டெஸ்ட் செய்து பார்த்த பிறகே காரணத்துக்கேற்ப, சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.