இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவராக இருந்தவர் ஹர்பஜன் சிங். 2011 இல் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர். இந்நிலையில், அவர் தன்னுடைய தந்தை குறித்து ரொம்பவே உருக்கமாக சில கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
ஜியோ சினிமா செயலியில் தவான் கராங்கே எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். திரையுலகம் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக அக்சய் குமார், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில்தான் தன்னுடைய தந்தை குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, “ஒரு தந்தையாக என்னுடைய குழந்தைகள் நல்ல மனிதர்களாக இருந்தால் போதும் என நினைக்கிறேன். கடவுளிடம் வேண்டும்போதும் அதையேதான் நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் என்னவாக வேண்டும் என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும். அதற்கு உறுதுணையாக நான் நிற்பேன். என்னுடைய தந்தையின் மூலமும் நான் நிறைய ஊக்கத்தைப் பெற்றிருக்கிறேன். அவர் ஒரு கடின உழைப்பாளி. நான் வாழ்வில் வெற்றி பெறுவதையும் எனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதையும்தான் அவர் கனவாக கொண்டிருந்தார்.
நான் இப்போது சில விஷயங்களை சிறப்பாக செய்துவிட்டேன். எனக்கென ஒரு பெயரை சம்பாதித்துவிட்டேன். ஆனால், அதையெல்லாம் பார்க்க அவர் இல்லை. அவர் எங்கிருந்தோ என்னை பார்த்துக் கொண்டும் ஆசிர்வதித்துக் கொண்டும் இருப்பார் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
என்னுடைய தந்தையை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமெனில் என்னுடைய அத்தனை உடமைகளையும் சொத்துகளையும் கூட விற்க நான் தயாராக இருக்கிறேன். கடந்த கால நாட்கள்தான் சிறந்தவை. அப்போது எங்களிடம் எல்லாமே குறைவாகத்தான் இருந்தது. ஆனால், நிறைவான திருப்தி இருந்தது. இப்போது எல்லாமே நிறைய இருக்கிறது. ஆனாலும் எதோ குறை இருப்பதைப் போன்றே இருக்கிறது.’ என உருக்கமாக பேசியிருக்கிறார்.