தனது மனைவியின் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, அதை சட்டவிரோதமாக வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சுகாதாரத்துறை மன்னித்து விட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
`ஃபுட் விளாக்’ யூடியூபரான இர்ஃபான் திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, நெப்போலியன் தொடங்கி அரசியல் பிரபலங்கள் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என பல்வேறு ஆளுமைகளை பேட்டி கண்டு, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். கடந்த ஆண்டு நடைபெற்ற தனது திருமணத்திற்கே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமலஹாசன், எம்.பி கனிமொழி மற்றும் பல திரை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து தனது செல்வாக்கை காட்டினார். இந்த நிலையில்தான், இர்ஃபானின் மனைவி ஆலியா கர்ப்பம் தரித்திருக்க, தம்பதி இருவரும் துபாய்க்கு சென்று அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் வயிற்றிலிருக்கும் சிசு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
அதன்பிறகு, சென்னைக்குத் திரும்பிய யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் ஒரு விழாவையே தனது வீட்டில் நடத்தி குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவித்து அதிரவைத்தார். அதுமட்டுமல்லாமல் அவை அனைத்தையும் வீடியோவாகப் பதிவுசெய்து தனது `Irfan Views’ யூடியூப் சேனலில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்வது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இர்ஃபானின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அதிகாரபூர்வமாக ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசின் அந்த செய்திக் குறிப்பில், “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களின்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரால் இர்ஃபானுக்கு பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இர்ஃபானால் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என யூடியூப் தளத்துக்கும், கணிணி குற்றம் (Cyber Crime) பிரிவுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவில் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள்மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்!” என எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து தான் வெளியிட்ட வீடியோவை இர்ஃபான் தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கினார். இருப்பினும் தமிழ்நாடு மருத்துவத்துறையின் – டி.எம்.எஸ் இயக்குநகரம், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்தியது. அதையடுத்து, இர்ஃபான், “எனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை பொதுவெளியில் வெளியிட்டது தவறுதான்; இது தொடர்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது யூடியூப் பக்கத்திலும் மன்னிப்பு வீடியோ வெளியிடுகிறேன்” எனக் கூறி மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். இதையடுத்து, இர்ஃபானின் மன்னிப்பு கடிதம் திருப்திகரமாக இருந்ததால் அதை மருத்துவத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும், “இதுவே சாதாரண நபர் ஒருவர் இந்தத் தவறை செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டால் அவரை சும்மா விட்டுவிடுவார்களா? அரசியல் பெரும்புள்ளிகளின் செல்வாக்கு இருப்பதனால் இர்ஃபானுக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கா? அவர்மீது எப்.ஃஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லையா? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? இது என்ன நியாயம்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், மற்றொரு ஃபைக்கர் யூடியூபரான டி.டி.எஃப் வாசன் செல்போனில் பேசியபடியே கார் ஓட்டிய விவகாரத்தில் அவரை உடனடியாக கைதுசெய்து, கோர்ட்டில் கொண்டுசென்று நிறுத்தியது தமிழ்நாடு காவல்துறை. இதைக் குறிப்பிட்ட நெட்டிசன்கள் `இர்ஃபானுக்கு ஒரு நியாயம்… டி.டி.எஃப் வாசனுக்கு ஒரு நியாயமா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் தானே… ஏன் இர்ஃபான் விவகாரத்தில் மட்டும் தமிழ்நாடு அரசும் மருத்துவத்துறையும் சைலன்ட் மோடில் இருக்கிறது. அவருக்கு ஆளுங்கட்சியின் பெரும் புள்ளிகள் பின்னாலிருந்து சப்போர்ட் செய்கின்றார்களா?’ எனக் கொதித்தெழுந்தனர்.
இது தொடர்பாக ஊடகங்களில் பேசியிருக்கும் வழக்கறிஞர்கள், “பொதுவாக இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறியும் ஆய்வகங்கள், மருத்துவர்கள்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்படும் என சட்டப் பிரிவு 2260-ல் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, வயிற்றிலிருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிவதற்கு துணைபோகும் நபர்களுக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என சட்டப்பிரிவு 25-ல் கூறப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் இர்ஃபான் செய்த குற்றத்திற்கு பிரிவு 25-ன் கீழ் குறைந்தபட்சம் மூன்று மாத சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும். குறைந்தபட்சம், இதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் வாரியத்துக்கு குற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரையாவது செய்யவேண்டும்!” என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதேபோல, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், இர்ஃபான் விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்திருக்க, `இந்த விவகாரம் தொடர்பாக என்ன செய்யலாம் என சம்மந்தப்பட்ட மத்திய அரசின் வாரியத்திடம் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை – டி.எம்.எஸ் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால், இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சென்று அறிந்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதிப்பதற்காக வெளிநாடுகளிலிருக்கும் மருத்துவமனைக்கு வரும் இந்தியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக் கூடாது என சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எது எப்படியானாலும் இர்ஃபான் செய்த குற்றத்துக்காக, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதுதான் இங்கிருக்கும் ஒரே கேள்வி!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb