இந்தியாவில் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலையொட்டி, சூதாட்டக் களத்தில் ‘பெட்டிங் மாஃபியா’க்கள் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்கள். ‘எந்தக் கட்சி அதிகமான எம்.பி-க்களைப் பெறும், அடுத்த பிரதமராக வரப்போவது யார், உ.பி-யில் அதிக தொகுதிகளில் வெல்லப்போகும் கட்சி எது..’ என்று ‘சட்டா பஜார்’ எனப்படும் ‘பெட்டிங் மார்க்கெட்’டில் ஏராளமானோர் பந்தயம் கட்டுகிறார்கள். இதில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரளுகிறது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மீது பல இடங்களில் சூதாட்டம் நடைபெறுவதைப்போல, மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் மீதும் சூதாட்டம் நடைபெறுகிறது.
‘பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்’, ‘மோடி மீண்டும் பிரதமர் ஆவார்’, ‘இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்’, ‘ராகுல் காந்தி பிரதமர் நாற்காலியில் அமருவார்’, ‘உத்தரப்பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளில் சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்’ – இப்படியாக ஏராளமானோர் ‘பந்தயம்’ கட்டியிருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
‘2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு 295 முதல் 305 வரை இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 55 முதல் 65 வரை இடங்கள் கிடைக்கும்’ என்று சட்டா பஜார் கணிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் மிகப்பெரிய அளவுக்கு தேர்தல் மீதும் சூதாட்டம் பெறுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் மே 13-ம் தேதி நடைபெற்றன. அங்கு, ‘அதிக தொகுதிகளில் வென்று முதல்வர் பதவியை ஜெகன்மோகன் ரெட்டி தக்கவைப்பார்’ என்றும், ’ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸைத் தோற்கடித்து சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடிப்பார்’ என்றும் ஏராளமானோர் பல கோடி ரூபாய் பந்தயம் கட்டியிருக்கிறார்கள்.
2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 90,110 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிபெற்றார். இந்த முறை, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றுவார் என்று பலர் ‘பெட்டிங்’ கட்டியிருக்கிறார்கள். அதேபோல, பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றும், குப்பம் தொகுதியில் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் பலர் ‘பெட்டிங்’ கட்டியிருக்கிறார்கள்.
இப்படியாக, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மட்டும் ரூ.4,00 கோடி அளவுக்கு ’பெட்டிங்’ கட்டப்பட்டிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலின்போது தெலுங்கு தேசம் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று பலர் பந்தயம் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பணத்தை இழந்தனர்.
இந்தியாவில் மிகப்பெரிய சூதாட்ட மையமாக ராஜஸ்தானின் ஃபலோடி நகரம் விளங்குகிறது. ஃபலோடி மாவட்டத்தின் தலைநகரான ஃபலோடி நகரில் ரகசியமாக இயங்கும் ‘பெட்டிங் மார்க்கெட்’, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பரபரப்பாகிவிட்டது. பெட்டிங் மாஃபியாக்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க 338 தொகுதிகளில் தனித்து வெற்றிபெறும் என்று ‘பெட்டிங் மார்க்கெட்’ வட்டாரத்திலிருந்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், நான்காம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பா.ஜ.க 290 தொகுதிகளில்தான் ஜெயிக்கும் என்ற கணிப்பு ‘பெட்டிங் மார்க்கெட்’ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது.
இந்தியாவில் ’பொது சூதாட்டச் சட்டம் 1867’-ன் கீழ் சூதாட்டம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தேசத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலை வைத்தே சூதாட்டம் ஆடுகிறார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் என்பது சட்டா பஜாரின் கணிப்பாக இருக்கிறது. சூதாட்ட கணிப்பு எந்தளவுக்கு பலிக்கப்போகிறது என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb