புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம். தற்போது பாஜக பெரும்பான்மையை பெறத் தவறியது என்பதால், இது மோடியின் தோல்வி.” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் முடிவுகள் மக்களின் முடிவுகளை பிரதிபலிக்கிறது. மக்களின் முடிவுகள் நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
இந்த முடிவுகள் மோடிக்கு எதிரானது என்பது தெளிவாக தெரிகிறது. இது மோடியின் அரசியல் தோல்வி. இந்த தேர்தலில் பாஜக ஒற்றை முகத்தை காண்பித்து வெற்றிபெற நினைத்தது. அது மோடியின் முகம். தற்போது பாஜக பெரும்பான்மையை பெறத் தவறியது என்பதால், இது மோடியின் தோல்வி.
காங்கிரஸ் பல சிரமங்களுக்கு மத்தியில் தான் இந்த தேர்தலை எதிர்கொண்டது என்பது உங்கள் அனைவருக்கும். சிரமங்களுக்கு மத்தியிலும், எங்களின் பிரச்சாரம் நேர்மையாக இருப்பதை உறுதி செய்தோம். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் மறுபுறம் மோடி தவறான செய்திகளை பரப்பி வந்தார்.
எதிர்க்கட்சிகளை நசுக்க பாஜக பல வழிகளிலும் பல முயற்சிகளை செய்தது. பாஜக தங்களை எதிர்த்தவர்களை சிறைக்கு பின்னால் தள்ளியது. எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. போராட்டம் அதன் இலக்கை இன்னும் எட்டவில்லை. வரும் நாட்களில் நாட்டு மக்களின் நலனுக்காவும், அரசியலமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் எங்களின் போராட்டம் தொடரும்.” என்று தெரிவித்தார்.