நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க 19 இடங்களில் தேர்தலைச் சந்தித்தது. எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அனைத்து வேட்பாளர்களும் வி.ஐ.பி-க்களாக களமிறக்கப்பட்டு இருந்தார்கள். கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் என அனைவரும் மக்களிடத்தில் நன்கு பரிச்சயமானவர்கள்தான்.
மேலும் தேர்தல் செலவுக்கான கவனிப்பும் பலமாகவே இருந்தது. இதுதவிர பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்களின் படையே களமிறங்கி வாக்கு சேகரித்து. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு வந்த கருத்துக்கணிப்பு முடிவுகளும் அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்தது. கூடவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவோம்’ என தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்துவந்தார். இதனால் அந்த கட்சி தொண்டர்கள் ரிசல்ட் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
கூடவே தேர்தல் முடிவுகள் வெளியான இன்று அண்ணாமலையின் பிறந்தநாள். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் காலை 6 மணிக்கெல்லாம் கமலாலயத்தில் குவிந்துவிட்டார்கள். அவர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் வெளியாகும் முடிவுகளை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மேலும் வெற்றி கொண்டாட்டத்திற்காக இனிப்பு, வெடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மதியம்போல தேசிய ஜனநாயாகக் கூட்டணி 250 இடங்களைத் தாண்டிய நிலையில், சென்னை கமலாலய அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
ஆனால் போகப்போக தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும்… பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. அதாவது பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், ‘தேர்தல் முடிவில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். ஆனால் காங்கிரஸ் 150 இடங்களைக்கூட தாண்டாது’ என்றெல்லாம் சொல்லிவந்தார்கள். இதற்கு நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருந்தன. அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் போட்டியை கொடுத்தது.
குறிப்பாக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் உற்சாகத்துடன் இருந்த பாஜக தொண்டர்கள் சோர்வடைய ஆரம்பித்தனர். மறுப்பக்கம் அண்ணாமலையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் தொண்டர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள்.