சென்னை: தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பாமக ஏற்றுக் கொள்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் அணி சேர்ந்திருந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால், அனைத்தையும் கடந்து வேறு சில காரணங்களால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியமாகவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் முதன்மை நோக்கம் மக்கள் பணி செய்வது தான். மக்களின் நம்பிக்கையை பெறுவதன் மூலம் மட்டும் தான் ஜனநாயகத்தில் வெற்றி சாத்தியமாகும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி உணர்ந்திருக்கிறது. எனவே, மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுவதற்காக கடந்த காலங்களை விட இரு மடங்கு அதிகமாக பாமக உழைக்கும். மக்கள் ஆதரவை மீண்டும் வெல்லும்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு தோல்வி புதிதல்ல. மிகப்பெரிய சரிவுகளைக் கண்டு மீண்டு வந்த வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. எனவே, தேர்தல் முடிவுகளைக் கண்டு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கவலைக் கொள்ளத் தேவையில்லை. மீண்டும் வெற்றி வசமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த இலக்கை நோக்கி நாம் பயணிப்போம். மக்களவைத் தேர்தலில் பா.ம.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.