உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஆ.ராசா. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை இம்முறை கடந்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா, பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் உட்பட 16 பேர் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 14 லட்சத்து 28 ஆயிரத்து 387 வாக்குகளில், 10 லட்சத்து 13 ஆயிரத்து 410 வாக்குகள் பதிவாகின.
நீலகிரியில் உள்ள மூன்று சட்டப்பேவைத் தொகுதிகளில் தபால் ஓட்டு போட தகுதியாக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3056 பேரும், மாற்றுத்திறனாளிகள் 4050 பேரும் உள்ளனர். இதில் தபால் ஓட்டு போடுவதற்கு வயதானவர்கள் 796 பேரும், மாற்றுத்திறனாளிகள் 981 பேர் வாக்களித்தனர்.
வாக்குகள் இயந்திரங்கள் உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. துணை ராணுவம் உட்பட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, 180 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீஸார் உட்பட 663 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோல் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 7 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அவினாசி சட்டமன்ற தொகுதிகளில் 24 சுற்றுகளாகவும், பவானிசாகர் 22, உதகை 18, குன்னூர் 17, கூடலூர் 16 சுற்றுகளாகவும் நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் 350 அலுவலர்களும், 120 நுண் பார்வையாளர்களும் ஈடுபட்டனர்.
பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டு செல்லப்பட்டன.
காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகித்து வந்தார்.
24 சுற்றுக்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 4.73,212 வாக்குகள், 2483 தபால் வாக்குகள் என மொத்தம் 4,72,089 வாக்குகள் பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றார். மொத்தம் பதிவாகிய 10 லட்சத்து 16 ஆயிரத்து 318 வாக்குகளில் 46.45 சதவீத வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் 2 லட்சத்து 31 ஆயிரத்து 111 வாக்குகளும், 1516 தபால் வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 627 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2 லட்சத்து 19 ஆயிரத்து 417 வாக்குகளும், 813 தபால் வாக்குகளும் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 230 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் 58 ஆயிரத்து 588 வாக்குகளும் 233 தபால் வாக்குகளும் என 58 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்றார்.
திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசமான 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகளை கடந்தார். இம்முறை 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நீலகிரி தொகுதி வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்கு வித்தியாசமாகும்.
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் எல்.முருகன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு தேர்தல் அலுவலர் மு.அருணா சான்றை வழங்கினார். தேர்தல் பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் உடனிருந்தனர்.