இன்று ஜூன் 4, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்தாலும், பங்குச் சந்தை கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளது. காலை முதலே இறக்கத்தைக் கண்டு வரும் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 11 மணி அளவில் கிட்டதட்ட 4000 புள்ளிகளுக்கும் மேல் இறக்கம் கண்டு 71,000 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 700 புள்ளிகள் இறக்கம் கண்டு 22500 என்ற நிலையில் வர்த்தகமாகிறது.
நேற்று ஜூன் 3ம் தேதி சென்செக்ஸ் சுமார் 2500 புள்ளிகள் ஏற்றம் கண்டு 76468-ல் நிறைவடைந்த வர்த்தகம், இன்று கடும் இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்புகள் பாஜகவுக்குச் சாதகமாக வந்த நிலையில் நேற்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டு வர்த்தகமானது. இன்று தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்திருந்தாலும் 300 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது. பல இடங்களில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக எதிர்பார்த்ததுபோல தனிப்பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. மேலும் முந்தைய தேர்தலில் வென்றதை விட குறைவான சீட்டுகளே வெற்றி பெறும் என்பதாகவும் நிலைமை இருக்கிறது. இதனால் பங்குச் சந்தை அதிருப்தி அடைந்திருக்கலாம் என்றும், நேற்றைய தினம் கிடைத்த லாபத்தை எடுப்பதற்காக முதலீட்டை விற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் நேற்றைய ஏற்றத்தினால் உற்சாகம் அடைந்த வர்த்தகர்கள் இன்றைய சரிவினால் கலக்கத்தில் உள்ளனர்.