புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி 34 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தள கட்சி 2 இடங்களிலும், ஆப்னா தளம் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. ஆசாத் சமாஜ் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. 2014 மக்களவை தேர்தலில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. அந்த வகையில் பாஜகவின் கோட்டையாக உத்தர பிரதேச மாநிலம் திகழ்ந்தது. கடந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 49.98 என இருந்தது குறிப்பிடத்தக்கது.
உ.பி-யில் பாஜக-வின் சறுக்கலுக்கு காரணம் என்ன? – எதிர்க்கட்சியின் கூட்டணி வியூகம், மதம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், இஸ்லாமியரகள், யாதவர்கள், ஓபிசி, தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்களை வகுத்தது பாஜக-வின் சறுக்கலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இண்டியா கூட்டணி சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 62 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிட்டது. இதில் 5 வேட்பாளர்கள் மட்டுமே யாதவர்கள். மீதமுள்ள 57 வேட்பாளர்களில் 27 ஓபிசி, 4 பிராமணர்கள், 2 தாக்குர்கள், 2 வைஷ்யர்கள், ஒரு கத்ரி, 4 இஸ்லாமியர்கள், 15 தலித்களை தேர்தலில் போட்டியிட வைத்தது சமாஜ்வாதி. இதோடு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலும் சமாஜ்வாதியின் வாக்கு வங்கி பெரிதும் உதவியுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த முறை பகுஜன் சமாஜ் தனித்தும் களம் கண்டுள்ளது சமாஜ்வாதிக்கு உதவியுள்ளது. மேலும், அகிலேஷ் யாதவ் முன்னெடுத்த பிடிஏ வியூகமும் பாஜக-வுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. காலம் காலமாக யாதவ் மற்றும் இஸ்லாமிய வாக்குகளை பெற்று வந்த சமாஜ்வாதி கட்சி, இதர வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் வாக்குகளையும் பெற வேண்டுமென்ற நோக்கில் பிடிஏ முழக்கத்தை அகிலேஷ் முன்னெடுத்தார். அது இந்த தேர்தலில் அவருக்கு பலன் தந்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில், புல்டோசர் அரசியல் போன்றவை பாஜக-வுக்கு இந்த தேர்தலில் பலன் தரவில்லை என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய மக்களின் வாக்குகளை கவர சில திட்டங்களை பாஜக முன்னெடுத்தது. அதுவும் அங்கு பலன் தரவில்லை. இது அனைத்துக்கும் மேலாக வேலைவாய்ப்பின்மை மற்றும் மாநில வளர்ச்சி போன்றவற்றை வாக்காளர்கள் கருத்தில் எடுத்துக் கொண்டதும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி கடும் பின்னடவை எதிர்கொண்டுள்ளார். கடந்த முறை ராகுல் காந்தியை வீழ்த்திய அவர் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் கிஷோர் லால் உடன் போட்டியிட்டு பின்னடைவை எதிர் கொண்டுள்ளார். சுமார் 1.20 லட்சம் வாக்குகள் அவர் பின்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 2014 தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. திரிணமூல் மற்றும் மார்க்சிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. 2014-ல் 17 சதவீதம், 2019-ல் 40.7 சதவீதமாகவும் பாஜகவின் வாக்கு விகிதம் அங்கு கூடி இருந்தது. இந்த முறை அதை மேலும் கூட்டும் முயற்சிகளை பாஜக முன்னெடுத்தது. மாநில அரசியலிலும் பாஜக பாணி அரசியல் மூலம் ஆதாயம் அடைந்தது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு சார்ந்த விசாரணை, அமலாக்கத் துறை சோதனை, சிபிஐ ரெய்டு, சந்தேஷ்காலி விவகாரம், மதம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்திய பாஜக, அங்கு அதற்கான பலனை பெறவில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மேற்குவங்க மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர்.
ஏனெனில், பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடையே களத்தில் நேரடி போட்டி நிலவியது. அதன் காரணத்தால் இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மாநிலத்தில் தனித்தே போட்டி என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதன்படி 42 தொகுதிகளுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களையும் அறிவித்தார். அது அந்த கட்சியின் தேர்தல் வியூகமாக இருந்தது. அதற்கான பலனையும் அறுவடை செய்துள்ளார்.
இருந்தும் இது மேற்குவங்கத்தில் முன்னிலை நிலவரம் என்பதால் இறுதி முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.