திருவனந்தபுரம்: கேரளாவில் விஎம்ஆர்-மனோரமா நியூஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் யுடிஎப் 16 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 2 இடங்களிலும் வெற்றி பெறும், எஞ்சிய 2 இடங்களில் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆலத்தூர், கண்ணூர் ஆகிய தொகுதிகள் எந்த அணிக்கும் செல்லலாம் எனத் தெரிகிறது.
மேலும் இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், வயநாட்டில் போட்டியிடும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு சதவீதம் இம்முறை மிகவும் சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2019 தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி 64 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், அது தற்போது 50 சதவீதமாக சரியும் என விஎம்ஆர்-மனோரமா நியூஸ் கணித்துள்ளது.
கேரளாவில் இம்முறையும் பாஜக எந்த தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்பில்லை, அதேவேளையில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா ஆகிய இரு தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.