வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாக கதிர் ஆனந்த், பா.ஜ.க சார்பாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க சார்பாக பசுபதி, நாம் தமிழர் கட்சியில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் களம் கண்ட கதிர் ஆனந்த், கடந்த தேர்தலின்போது தோல்விக்கு மிக அருகில் சென்று கடைசி நேரத்தில்தான் வெற்றிபெற்றார். அப்போது, இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்கி, கதிர் ஆனந்துக்குக் கடும் போட்டியை ஏற்படுத்திய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். இந்த முறை ஏ.சி.சண்முகம் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டதால் `கிளீன் போல்டு’ ஆகியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி நலத்திட்டங்களைச் செயல்படுத்தாதது, பிரசாரத்தில் தேவையற்ற சர்ச்சைப் பேச்சுகள் ஆகியவை கதிருக்கு மைனஸாகப் பார்க்கப்பட்டன. அதை அரசியலாக்கத் தெரியாத ஏ.சி.சண்முகம், தொடர் தோல்வியால் தன்மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபம், பசை பலம் ஆகியவற்றை நம்பி பிரசாரத்திலும் சுணக்கம் காட்டினார். கதிர் ஆனந்த் மீதான அதிருப்தியைச் சரிக்கட்ட அவருடைய தந்தை துரைமுருகனே சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்தார். ‘பூத்’வாரியாக தி.மு.க-வின் பலமான கட்டமைப்பும், பட்டியல் சமூக வாக்குகள் மற்றும் தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளும் கதிருக்குக் கைகொடுத்திருக்கின்றன.
அ.தி.மு.க சார்பில் களமிறங்கிய பசுபதிக்கு சொந்த கட்சி வாக்குகள்கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. பரிதாப நிலைக்கு அ.தி.மு.க சென்றிருப்பதையும் பார்க்க முடிகிறது. அதிகபட்சமாக 21 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கடைசி வரை அவருக்கு ஏறுமுகம் மட்டுமே இருந்தது. சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து இரண்டாவது முறையாக வேலூர் தொகுதியை தக்க வைத்துகொண்டிருக்கிறார் கதிர் ஆனந்த்.
3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க-வும் கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதில் மிகுந்த பரிதாபத்துக்குள்ளானவர் ஏ.சி.சண்முகம்தான். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக `ஹாட்ரிக்’ தோல்வியடைந்ததால் கண்கலங்கிவிட்டார். கதிர் ஆனந்தின் இந்த வெற்றியை தி.மு.க-வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது, சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்தான். அங்குமிங்குமாக நடப்பது, மரத்தடியில் உட்கார்ந்து சிந்திப்பது என ஆழ்ந்த மன சிந்தனையிலேயே இருந்தார். கடைசியாக நோட்டாவை கூட மன்சூர் அலிகான் முந்த முடியாமல் போய்விட்டது. கடைசியாக, நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள்கூட மன்சூர் அலிகானுக்கு பதிவாகவில்லை. தன்னை நோட்டோ முந்திவிட்ட கோபத்தில் தலை முடியை கைகளால் களைத்துவிட்டபடியே வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுவிட்டார் மன்சூர் அலிகான்.!
தற்போதைய நிலவரம்;
தி.மு.க – 4,46,326
பா.ஜ.க – 2,72,289
அ.தி.மு.க – 88,584
நாம் தமிழர் கட்சி – 38,978
மன்சூர் அலிகான் – 2,181
நோட்டா – 6,695
வாக்கு வித்தியாசம் – 1,74,037.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88