புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.
இதில், பா.ஜ.க. சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசிய பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களிடையே பேசினார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடி ஒரு வலிமையான அரசை உருவாக்கி இருக்கிறார். பிரதமருக்கு ஆசி வழங்கியதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நாடு, கட்சி மற்றும் நாட்டின் மக்களை எப்போதும் அவர் முன்னெடுத்து வழிநடத்தி சென்றார். அவரை நான் கட்சி தலைமையகத்திற்கு வரவேற்கிறேன். கடந்த சில மாதங்களாக, கடுமையாக உழைத்த கூட்டணியை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் அவற்றின் தொண்டர்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும், கூட்டணி வெற்றி பெற உதவியதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனினும், 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கே சிலர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒட்டு மொத்த நாடும் பிரதமர் மோடியுடன் துணை நிற்கிறது என்பது அவர்களுக்கு மறந்து விட்டது என்று பேசியுள்ளார்.