Lok Sabha Elections 2024: கங்கனா ரணாவத் டு ராதிகா சரத்குமார் – திரைப் பிரபலங்களின் வெற்றி நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பிரபல முகமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் முக்கியமான தொகுதிகளில் களமிறக்கப்படுவது தேர்தல் வரலாற்றில் வழக்கமான ஒன்றுதான். அதுபோல இந்த முறையும் பல சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி இந்த முறை நடிகைள் கங்கனா ரணாவத், ஹேமாமாலினி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரை முக்கிய தொகுதிகளில் களமிறக்கியது. மற்றொருபுறம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யூசுப் பதானையும், கீர்த்தி ஆசாதையும் மேற்கு வங்கத்தில் களமிறக்கியது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகரில் களமிறங்கினார். நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியிலும், இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரிலும் களமிறங்கினார்கள்.

கங்கனா

கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.கவுக்கு ஆதரவாகப் பல தளங்களில் நடிகை கங்கனா ரணாவத் பேசி வந்தார். இப்படியான செயல்களுக்குப் பின்னர் பா.ஜ.க இவரை ஹிமாச்சல் பிரதேஷின் மண்டி தொகுதியில் களமிறக்கியது ஆச்சரியமான ஒன்றுமல்ல. இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போதுதான், “என் கைவசம் இப்போது அதிக திரைப்படங்கள் உள்ளன. அதனால் நான் சினிமாவை விட்டு இப்போது விலகமாட்டேன்” எனப் பேசியிருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்று மண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அரிதாகப் பூக்கும் பூவைப் போல இந்த முறை வெற்றி கண்டிருக்கிறார் நடிகர் சுரேஷ் கோபி. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற கேரள மாநில சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு தோல்வியைக் கண்டிருந்தார். இந்த முறை மீண்டும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டிருக்கிறார்.

மற்றொரு மலையாள நடிகரான கிருஷ்ணகுமார் பா.ஜ.க சார்பாக கொல்லம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார்.

நடிகர் முகேஷும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதே கொல்லம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார்.

Hema Malini

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க சார்பாக உத்தரப் பிரதேசத்தின் மதூரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருந்தார் நடிகை ஹேமா மாலினி. தற்போது அதே தொகுதியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரைப் போலவே கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தலிலும் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நடிகர் மனோஜ் திவாரி மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

இதே போல முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான், திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்கத்தின் பக்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேற்கு வங்கத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்கத்தின் ஹூக்லி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரச்னா பேனர்ஜீ சமீபத்திய நிலவரப்படி பின்னடைவில் இருக்கிறார்.

ஆந்திரா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. அந்தக் கூட்டணியில் இருக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தற்போது வரை 14 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 7 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆந்திராவின் பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாணும் முன்னிலை வகித்து வருகிறார்.

பவன் கல்யாண்

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.கவோடு இணைத்திருந்தார். அதன் பிறகு பா.ஜ.க சார்பாக விருதுநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார், மூன்றாம் இடத்தைப் பிடித்து பின்னடைவில் இருக்கிறார்.

இதே தொகுதியில் தே.மு.தி.க சார்பாகக் களமிறக்கப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன் சமீபத்திய நிலவரப்படி இரண்டாவது இடத்தைப் பிடித்து பின்னடைவில் இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கடலூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட இயக்குநர் தங்கர் பச்சான் தோல்வியடைந்திருக்கிறார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட இயக்குநர் களஞ்சியமும் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகானும் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.